Nayanthara Vignesh Shivan Surrogacy issue : நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்தச் சூழலில் விக்னேஷ் இரண்டு நாள்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இரு குழந்தைகளுடன் அவரும், நயன்தாராவும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம். நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். நமது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் என அனைத்து நல்ல வெளிப்பாடுகளும் இணைந்து 2 குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்” என பதிவிட்டிருந்தார்.
ஜூன் மாதம்தான் இருவருக்கும் திருமணமான சூழலில் எப்படி அக்டோபர் மாதமே இவர்களுக்கு குழந்தை பிறந்தது என பலரும் கேள்வி எழுப்பி பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டனர். இதனையடுத்து அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர் என கூறப்பட்டது. அதேசமயம் நயனும், விக்கியும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதில் விதிகளை மீறினரா எனவும் கேள்வி எழுந்தது.
நிலைமை இப்படி இருக்க இந்த விவகாரம் தொடர்பாக நயனிடமும், விக்னேஷ் சிவனிடமும் விளக்கம் கேட்கப்படுமென்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். மேலும், சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில்தான் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. எனவே அங்கு பணி செய்யும் மருத்துவர்களிடம் விசாரணை நடத்த தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்தது. அதன்படி மூன்றுபேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது.
இந்த விசாரணை குழுவிடம் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி உரிய ஆதாரத்துடன் பதில் அளித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பான சுகாதாரத்துறையின் அறிக்கை வெளியானதாக கூறப்படுகிறது. அதில், “இரட்டை குழந்தை விவகாரத்தில் விதி மீறவில்லை” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி நயன்தாரா தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.