புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் விவசாயிகள் போராட்டம் தொடங்கினர். இப்போராட்டம் ஓராண்டுக்கு மேல் நீடித்தது. விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் போராட்டம் முடிவுக்கு வந்தது. எனினும் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எஸ்கேஎம் ஒருங்கிணைப்பு குழு மற்றும் வரைவுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் 2-ம் ஆண்டு தினத்தையொட்டி நவம்பர் 26-ம் தேதி நாடு முழுவதும் மாநிலத் தலைநகரங்களில் ஆளுநர் மாளிகை நோக்கி விவசாயிகள் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்தப் பேரணியில் விவசாயிகள் திரளாகப் பங்கேற்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.