புதைக்கப்பட்ட பெண்ணை காப்பாற்றிய ஸ்மார்ட் வாட்ச்| Dinamalar

வாஷிங்டன் :அமெரிக்காவில் உயிருடன் புதைக்கப்பட்ட பெண் ‘ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்’ வாயிலாக கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வசிப்பவர் சே கியோங்,53. இவரது முன்னாள் மனைவி யங் சூக் ஆன், 42, என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்து விட்டார்.

இருப்பினும் கியோங் தன் முன்னாள் மனைவி வீட்டுக்கு அடிக்கடி சென்று தகராறு செய்து வந்தார். சமீபத்தில் அங்கு சென்ற கியோங், ‘உன்னை கொலை செய்து விட்டால் ஜீவனாம்சம் தருவதில் இருந்து விடுதலை கிடைக்கும்’ என கூறியுள்ளார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த கியோங், யங் சூக்கின் கை, கால், வாயை டேப் வைத்து கட்டி அறை ஒன்றில் தள்ளி உள்ளார்.

அந்த சமயத்தில் யங் தான் கட்டியிருந்த ‘ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்’ வாயிலாக, 911 அவசர உதவி எண்ணை அழைத்துள்ளார். ஆனால் பேச முடியவில்லை.

பின் அறைக்குள் வந்த கியோங் கத்தியால் யங் சூக்கை குத்தியுள்ளார். மயங்கி விழுந்த அவரை காரில் எடுத்து சென்று புறநகர் பகுதி ஒன்றில் பள்ளம் தோண்டி அதில் கிடத்தி மண்ணைப் போட்டு மூடியுள்ளார்.

அவசர அழைப்பு வந்த ஸ்மார்ட் வாட்ச் இருக்கும் இடத்தை, போலீசார் சிக்னலை வைத்து தேடி கிளம்பினர்.அதேநேரத்தில் அரைகுறையாக மண் மூடியிருந்ததால், மயக்கம் தெளிந்த யங், பள்ளத்தில் இருந்து எழுந்து அருகில் இருந்த ஒரு வீட்டுக்கு சென்று உதவி கோரினார்.
அதற்குள் போலீசாரும் அங்கு வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கியோங்கை கைது செய்தனர்.
அவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதால் ஜாமின் வழங்கி மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், கியோங்கை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.