ரியாத்: “அடுத்த சில காலம் பொருளாதார அளவில் அரேபிய நாடுகளுக்கு நன்றாகவும், பிற நாடுகளுக்கு கடினமாக இருக்கும்” என்று சவுதி நிதியமைச்சர் முகமது அல் ஜடான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரியாத்தின் முதன்மை முதலீட்டு மாநாட்டில் அவர் பேசும்போது, “அடுத்த ஆறு மாதங்கள்… ஏன் அடுத்த ஆறு வருடங்கள் பொருளாதார அளவில் அரேபிய நாடுகள் நன்றாக இருக்கும். ஆனால், உலக அளவில் கடினமாக இருக்கும். ஏனெனில், அதிகப்படியான வட்டி விகிதங்கள், பணவீக்கத்தால் உலக நாடுகள் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளன.
இந்தச் சூழலில் அரபு நாடுகள் பிற நாடுகளுக்கு நிச்சயம் உதவும். குறைந்த தனிநபர் வருமானம் கொண்ட நாடுகளுக்கு எரிபொருள் ரீதியாகவும், உணவு ரீதியாகவும் நாங்கள் உதவுவோம். பிற நாடுகளுக்கு உதவுவது நமது கடமை. உலகளவில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதற்கும், ஒத்துழைப்பு ஏற்படுவதற்கும் நாம் உறுதியாக உழைக்க வேண்டும், அதைத்தான் நாங்கள் செய்கிறோம்.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாங்கள் பசுமையில்ல வாயுகள் வெளியேற்றத்தை குறைக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கிறோம். புதுப்பிக்க கூடிய ஆற்றங்களில் முதலீடு செய்ய வேண்டும்” என்றார்.
கரோனாவிற்கு பிறகு உலக அளவில் பொருளாதார மந்த நிலை நீடிக்கிறது. உக்ரைன் – ரஷ்யா போர் இந்த மந்த நிலையை தீவிரப்படுத்தியதன் காரணமாக பல்வேறு நாடுகளில் பணவீக்கம் தொடர்கிறது. இந்த பொருளாதார மந்தநிலை பல நாடுகளில் ஆட்சி மாற்றத்துக்கும் காரணமாகியுள்ளது. பணவீக்கத்தை குறைக்க தீவிர நடவடிக்கைகளில் உலக நாடுகள் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.