ராம் நகர் : கர்நாடகாவின் பன்டே மடத்தின் பசவலிங்க சுவாமிகள் தற்கொலையில், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வேறொரு மடாதிபதியின் மிரட்டலுக்கு ஆளாகி, அவர் தற்கொலை செய்து கொண்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று பக்க கடிதம்
இங்கு, ராம்நகர் மாவட்டத்தில் உள்ள கஞ்சுகல் பன்டே மடத்தின் பசவலிங்க சுவாமிகள், 45, நேற்று முன்தினம் காலை, மடத்திலேயே துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், மடாதிபதி எழுதி வைத்த மூன்று பக்க கடிதம், மொபைல் போன்களை கைப்பற்றினர்.
அவர் எழுதிய கடிதத்தில், ‘மடத்தை என்னிடம் இருந்து பறிக்கவும், என்னை அவரது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும், வேறொரு மடாதிபதி முயற்சிக்கிறார்.
இதற்காக, ஒரு இளம்பெண்ணை மடத்துக்கு அனுப்பினார்.
‘அந்தப் பெண்ணின் பேச்சில் மயங்கி, அவர் மீது மோகத்தில் விழுந்தேன். இதை ‘வீடியோ’வில் பதிவு செய்து, தினமும் என்னை இம்சிகின்றனர்.
‘இந்த சதி வலையை பின்னியது, எனக்கு வேண்டப்பட்ட மற்றொரு மடத்தின் சுவாமிகள். அந்த சதிக்கு நான் பலியாகி விட்டேன்’ என விவரித்துள்ளார்.
தீவிர விசாரணை
இந்தக் கடிதத்தையும், அவரது இரண்டு மொபைல் போன்களையும், போலீசார் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர்.
இது பற்றிய அறிக்கை வந்த பின், பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வரும் என கூறப்படுகிறது. மிரட்டிய மடாதிபதி குறித்தும், தீவிர விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்