பெங்களூரு சாலை பள்ளங்களை மூடும் பணிகளை சரியாக நிர்வகிக்காத, பெங்களூரு மாநகராட்சி பொறியாளர்களுக்கு, தனியார் பொறியாளர்கள் உதவியுடன் பயிற்சி அளிக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த பயிற்சியில், அவர்களுக்கு நிர்வாக திறமையை கற்று கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பெங்களூரில், சாலை பள்ளங்கள் பிரச்னை பெரும் பிரச்னையாக மக்களை வாட்டி வதைக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண முடியாமல், மாநகராட்சி திணறுகிறது. சாலைகளின் நிர்வகிப்புக்காகவே, ஆண்டுதோறும் நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவாகிறது. மத்திய, மாநில அரசுகளும் தாராளமாக நிதியுதவி வழங்குகின்றன. ஆனாலும் மக்கள் நடமாட, தரமான சாலைகள் இல்லை.
சாலை பள்ளங்களுக்கு பலியான உயிர்களின் எண்ணிக்கை அதிகம். வாகன ஓட்டிகள் தினமும் பள்ளங்களை தவிர்க்க, சர்க்கஸ் செய்தபடி வாகனத்தை ஓட்டுகின்றனர். இவ்விஷயத்தில் கர்நாடக உயர் நீதிமன்றமும், பல முறை மாநகராட்சியை வசை பாடியுள்ளது.
மாநகராட்சியும், சாலை பள்ளங்களை மூடும் பணியை மேற்கொள்கிறது என்றாலும், அது தரமானதாக இருப்பதில்லை. லேசான மழைக்கே தாக்கு பிடிக்காமல், பள்ளங்கள் ஏற்படுகின்றன.
இந்த பிரச்னைக்கு, பொறியாளர்களிடம் திறமை இல்லாமை என்பதை, மாநகராட்சி உணர்ந்துள்ளது. தற்போது இவர்களுக்கு பயிற்சியளிக்க திட்டமிட்டுள்ளது.
பெங்களூரு மாநகராட்சியின், பணிகள் பிரிவில் சிவில் பணிகளை நடத்தும் 63 செயல் நிர்வாக பொறியாளர்கள், 213 உதவி செயல் நிர்வாக அதிகாரிகள், 288 உதவி பொறியாளர்கள் என, மொத்தம் 564 பொறியாளர்கள் உள்ளனர். மாநகராட்சி சார்பில் கட்டடம் கட்டும் பணிகள், சாலை நடைபாதை, சாக்கடை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது, இந்த பொறியாளர்களின் பணியாகும்.
சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டால் மூடுவது, நடைபாதை பழுதடைந்தால், அவற்றை சரி செய்வது, சாக்கடைகள் அடைப்பை சரி செய்வதும், இவர்களின் பணி. மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகள் பொறியியல் படித்து முடித்து, பல ஆண்டுகள் மாநகராட்சியில் பணியாற்றிய அனுபவம் உள்ள இவர்களுக்கு, விதிமுறைப்படி சாலை பள்ளங்களை மூட தெரியவில்லை.
மனம் போனபடி பள்ளங்களை மூடி, மாநகராட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகின்றனர்.
சாலை பள்ளங்களை மூடுவது தொடர்பாக, சில விதிமுறைகள் உள்ளன. பள்ளங்களில் மண் துகள், நீர் நிரம்பியிருந்தால், அவற்றை முழுமையாக அகற்ற வேண்டும். அதன்பின் அந்த பள்ளத்தில், தார் கலவையை போட்டு மூட வேண்டும்.
ரோலர் மூலம் சமன்படுத்த வேண்டும். சாலை மேற்புறமும், பள்ளங்கள் மூடப்பட்ட இடமும், சமமானதாக இருக்க வேண்டும்.
ஆனால், மாநகராட்சி பொறியாளர்கள், இந்த விதிமுறையை பின்பற்றுவதில்லை. பள்ளங்களில் உள்ள மண் துகள், நீரை அகற்றாமல், அதன் மீதே தார் பூசுகின்றனர்.
இதனால் லேசான மழை பெய்தாலும், மூடப்பட்ட பள்ளங்கள் மீண்டும் வாயை திறக்கின்றன. தரமாக பணிகள் நடத்தவில்லை என, மக்கள் அதிருப்தி அடைகின்றனர்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில், தனியார் நிறுவன பொறியாளர்கள் உதவியுடன், மாநகராட்சி பொறியாளர்களுக்கு பயிற்சியளிக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.இந்த பயிற்சியில், பணிகளை மேற்பார்வையிடுவது, ஊழியர்களை எப்படி வேலை வாங்குவது என்பது குறித்தும், ‘பாடம்’ நடத்தப்பட உள்ளது.
இது குறித்து, பெங்களூரு மாநகராட்சி தலைமை பொறியாளர் பிரஹலாத் கூறியதாவது:
சாலை நிர்வகிப்பு, பள்ளங்களை மூடுவது குறித்து, மாநகராட்சி பொறியாளர்களுக்கு, தனியார் நிறுவனங்கள், மாநகராட்சியின் மூத்த பொறியாளர்கள் உதவியுடன் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
விரைவில் பயிற்சிக்கான தேதி முடிவு செய்யப்படும். ‘பிக்ஸ் மை ஸ்ட்ரீட்’ செயலி பயன்படுத்துவது, அதில் சாலை பள்ளங்கள் பற்றிய தகவல்களை, அப்லோட் செய்வது, பள்ளங்கள் மூடப்பட்ட தகவல்களை அப்லோட் செய்வது குறித்து, தனியார் நிறுவன பொறியாளர்கள் வாயிலாக விவரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்