போன் பே நிறுவனம் வணிக சின்னம் பிரச்சனை குறித்து தொடர்ந்த வழக்கில், பண பரிவர்த்தனை சேவைகளை வழங்குவதற்கு மொபைல் பே நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து போன் பே நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, “தங்களுடைய நிறுவனத்தின் வணிகச் சின்னத்தைப் போல, மொபைல் பே நிறுவனத்தின் வணிகச் சின்னம் இடம் பெற்றிருக்கிறது. அதனால் மொபைல் பே நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, மொபைல் பே செயலியின் போட்டோவும் போன் பே செயலியின் போட்டோவைப் போல் இருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி சுந்தர் விசாரணை செய்தார்.
இரு செயலிகளுடைய வணிக சின்னமும் போட்டோவும் முழுமையாக ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும் கூட, பொதுமக்களுடைய பார்வையில் அதைப் பார்க்கும்போது, அவை இரண்டும் ஒரே தோற்றத்தில் இருப்பதற்கான முகாந்தரங்கள் இருக்கின்றன என்று கூறிய நீதிபதி மொபைல் பே நிறுவனம் பண பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ளக்கூடாது என்று இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், மொபைல் பே செயலியில் பணம் சேர்ப்பது உள்ளிட்ட பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று அனுமதித்த நீதிபதி, இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்குவது குறித்த கோரிக்கைக்கு பதிலளிக்குமாறு கூகுள் நிறுவனத்திற்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு இந்த வழக்கு குறித்த விசாரணையை தள்ளி வைத்திருக்கிறார்.