ராமநாதபுரம்: மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வங்கியிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்ட தங்கக் கவசம் பசும்பொன் தேவர் சிலைக்கு இன்றிரவு அணிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் அக்.30-ம் தேதி விடுதலைப் போராட்ட தியாகி முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்கக் கவசம் தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும். அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் என இரு பிரிவினராக செயல்படுவதால் தங்கக் கசவம் எடுப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. அதனையடுத்து அதிமுகவின் திண்டுக்கல் சீனிவாசன் தங்கக் கவசத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் இன்று மாலை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், இரு தரப்பினரிடமும் தங்கக் கவசம் ஒப்படைக்கப்படாது, மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் தங்கக் கவசத்தை பெற்று ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. மேலும் விழா முடிந்ததும் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கக் கவசத்தை வங்கியில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் சொல்லப்பட்டது.
அதன்படி, இன்றிரவு மதுரை வங்கியிலிருந்து பலத்த ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் பசும்பொன்னிற்கு எடுத்து வந்தார். அங்கு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ராஜசேகரன் பெற்று, தேவர் நினைவாலய பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தார்கள். அங்கு இரவு 9 மணி முதல் 9.30 மணியளவில் தேவர் நிலைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலர்கள், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல் முன்னிலையில் தேவர் நினைவாலய நிர்வாகிகள் தங்கவேலு, பழனி உள்ளிட்டோர் தேவர் சிலைக்கு தங்கக் கவசத்தை அணிவித்தனர். அதனையடுத்து தேவர் சிலைக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.