மதுரை: நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருவது அக்னி தீர்த்தத்தில் குளிக்கவா அல்லது கழிவுநீரில் குளிக்கவா என கேள்வி எழுப்பியுள்ள ஐகோர்ட் கிளை, அரசு தரப்பில் பதிலளிக்க கூறியுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த மார்க்கண்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலின் எதிரில் கடல் பகுதியில் அக்னி தீர்த்தத்தில் அனைவரும் புனித நீராடுவர். ஆனால், அக்னி தீர்த்த கடல் பகுதியில் சாக்கடைகள், குப்பைகள் மற்றும் பல்வேறு வகையான கழிவுகள் சேர்கின்றன. இதனால் கடல் பகுதி சாக்கடையை போல உள்ளது கடல் பகுதியில் கழிவுகள் கலப்பதை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது நீதிபதிகள், ‘‘அக்னி தீர்த்த கடலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க யார் நடவடிக்கை எடுக்க வேண்டும்? சாக்கடை கலப்பதை தடுக்க இதுவரை முறையான நடவடிக்கை இல்லை. வெளிநாடுகளில் இருந்தும், நாடு முழுவதும் இருந்தும் ஏராளமானோர் ராமேஸ்வரத்திற்கு வருகின்றனர். இவர்கள் தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா அல்லது கழிவுநீரில் குளிக்க வருகின்றனரா எனத் தெரியவில்லை. உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும்’’ என்றனர். பின்னர் நீதிபதிகள், வேறொரு வழக்கில் ஏற்கனவே வக்கீல் கமிஷனர் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்யவும், இந்த மனுவிற்கு நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமை செயலர், ராமநாதபுரம் கலெக்டர் ஆகியோர் பதிலளிக்கவும், கோயில் இணை ஆணையர் ஆஜராகி விளக்கவும் உத்தரவிட்டனர்.