ரிஷி சுனக் அமைச்சரவையில் உள்துறை மந்திரியாக சுவெல்லா பிரேவர்மென் மீண்டும் நியமனம்

லண்டன்,

இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சனுக்கு பின்பு பிரதமராக கடந்த செப்டம்பர் 5-ந்தேதி பொறுப்பேற்று கொண்ட லிஸ் டிரஸ் அமைச்சரவையில், இந்திய வம்சாவளி பெண்ணான சுவெல்லா பிரேவர்மென் (வயது 42) உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

எனினும், மந்திரியான பின்னர் அவர் அளித்த பேட்டி இந்தியா உள்பட சர்வதேச அரங்கில் புயலை கிளப்பியது. அவர் அளித்த பேட்டியில், இங்கிலாந்து நாட்டில் குறைந்த திறனுடைய அகதிகள், சர்வதேச மாணவர்கள் அதிக அளவில் உள்ளனர். வருகையும் தருகின்றனர். இவர்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்படைந்து உள்ளது.

அதனால், புலம்பெயர்வோர் எண்ணிக்கையை குறைக்கவும் மற்றும் குடியுரிமை கொள்கையை மறுஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான நோக்கங்களை, டிரஸ்சின் அரசில் உள்ள அனைத்து மூத்த மந்திரிகளும் பகிர்ந்து கொண்டனர் என பிரேவர்மேன் கூறினார்.

இதேபோன்று மற்றொரு பேட்டியின்போது, விசா காலக்கெடு முடிந்த பின்பும், இங்கிலாந்தில் தங்கியுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து மக்கள் ஒன்றும் இங்கிலாந்து எல்லைகளை இந்தியர்களுக்கு திறந்து விடுவதற்காக, பிரெக்சிட்டில் வாக்களிக்கவில்லை என அவர் கூறினார்.

இந்தியர்களுக்கு எதிரான அவரது இந்த சர்ச்சை பேச்சுக்கு இந்திய தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசும் எதிர்வினையாற்றியது.

இந்நிலையில், பிரேவர்மேன் அப்படியே பல்டி அடித்து, இந்தியாவுக்கு ஆதரவாக பேசினார். தீபாவளியை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்திய வம்சாவளி மக்களாலேயே இங்கிலாந்தின் வளம் பெருகியுள்ளது.

இந்திய சமூக உறுப்பினராக நான் இருப்பது பெருமைக்குரிய விசயம். இங்கிலாந்தின் கிராமங்களில் இருந்து நகரங்கள் வரை, தங்கியுள்ள இந்தியர்கள் நாட்டை அலங்கரித்து உள்ளனர் என கூறினார். இப்படி அடுத்தடுத்து முன்னுக்கு பின் முரணான அவரது பேச்சுகள் சர்ச்சையை கிளப்பிய நிலையில், திடீரென பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டார். இதனை தொடர்ந்து லிஸ் டிரஸ்சும் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

இந்த சூழலில், இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்களின் ஆதரவுடன் ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக, இளம் பிரதமரானவர் என்ற பெருமையை சுனக் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், அரசர் மூன்றாம் சார்லசை நேற்று சந்தித்து பேசினார். இதன்பின்பு, அரசர் 3-ம் சார்லஸ், முறைப்படி புதிய பிரதமராக ரிஷி சுனக்கை அறிவித்துள்ளார்.

ரிஷி சுனக்கின் அமைச்சரவையில் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியான சுவெல்லா பிரேவர்மென் மீண்டும் உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். பிரேவர்மென் பதவி விலகிய 6 நாட்களுக்குள் மீண்டும் மந்திரியாகி உள்ளார். இதனை கன்சர்வேடிவ் கட்சி டுவிட்டரில் நேற்றிரவு உறுதிப்படுத்தி உள்ளது.

டிரஸ்சின் அமைச்சரவையில் இருந்து பதவி விலகிய பிரேவர்மென், நான் ஒரு தவறு செய்து விட்டேன். அரசு விதிகளை மீறி விட்டேன். அதற்கு பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகுகிறேன் என கூறி கடந்த 18-ந்தேதி மந்திரி பதவியில் இருந்து விலகினார்.

இதுபற்றிய தனது பதவி விலகல் கடிதம் ஒன்றை லிஸ் டிரஸ்சுக்கு அனுப்பினார். இதுபற்றி எம்.பி.க்களுக்கும் தகவல் தெரிவித்து உள்ளார். எனினும், பிரதமர் டிரஸ்சின் உத்தரவின் பேரிலேயே செயல்பட்டேன் என அவர் அப்போது கூறினார்.

எனினும், கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டு, அச்சுறுத்தலுக்கு ஆளானார்கள் என்றும் ஒரு கட்டத்தில் கடுமையாக கையாளப்பட்டனர் என்றும் அரசியல்வாதிகளால் கூறப்பட்டது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.