வாரணவாசியில் காவல் உதவி மையம் செயல்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

வாலாஜாபாத்: வாரணவாசியில் அமைக்கப்பட்டு உள்ள காவல் உதவி மையம் எப்போது செயல்படும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அம்மையத்தை உடனடியாக செயல்படுத்த அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். வாலாஜாபாத்தில் ஒரகடம் செல்லும் சாலையை ஒட்டி அமைந்துள்ளது வாரணவாசி ஊராட்சி. இதை சுற்றிலும் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வாரணவாசி வழியே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பணிகள் நாள்தோறும் வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும், இந்த ஊராட்சியில் அமைந்துள்ள 10க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளில் ஏராளமான வெளிமாநில, மாவட்ட மக்கள் இப்பகுதிகளில் தங்கியுள்ளனர்.

வாரணவாசி ஊராட்சி பகுதிகளில் ஏதேனும் குற்றச் சம்பவங்கள், விபத்துகள் குறித்து, நீண்ட தூரத்தில் உள்ள ஒரகடம் காவல் நிலையத்தில்தான் புகார் தெரிவிக்க வேண்டும். இதனால் பல்வேறு சமயங்களில் விசாரணை தாமதமாகி வந்தன. இதைத் தொடர்ந்து, வாரணவாசி சாலை சந்திப்பு பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒரு காவல் உதவி மையம் அமைக்கப்பட்டது. எனினும், அந்த காவல் உதவி மையம் இதுவரை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. எனவே, வாரணவாசி சாலை சந்திப்பில் உள்ள காவல் உதவி மையத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.