வீட்டு சமையலறையின் அவசியப் பொருள்களில் ஒன்றாக மாறிவிட்டது ஃபிரிட்ஜ். தவிர்க்க முடியாத இந்த சாதனத்தை, நாம் காய்கறிகளை கெட்டுப்போகாமல் வைத்திருக்கவும், உணவு பொருள்களை பாதுகாக்கவும் பயன்படுத்துகிறறோம். பெரும்பாலும், பிளாஸ்டிக் பைகள் கொண்டே அந்தப் பொருள்களை சேமித்து வைத்திருக்கிறோம். ஆனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது ஆரோக்கியத்துகும், சுற்றுச்சூழலுக்கும் நல்லது. எனவே, பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் எப்படி ஃபிரிட்ஜில் பொருள்களை சேமிக்கலாம் என்பது குறித்துப் பார்க்கலாம் இங்கு.

பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக ஃப்ரிட்ஜில் பயன்படுத்தக் கூடியவை…
ஆர்கானிக் பருத்தி பைகள் (Organic Cotton Bags)
ரொம்பவே இலகுவான, பயன்படுத்த எளிதான, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத பை இது. காய்கறிகளை இதில் வைத்து ஃபிரிட்ஜில் வைக்கலாம்.
ஃபிரஞ்சு டெர்ரி பைகள் (French Terry Bags)
இது கீரை வகைகளை அதன் பச்சை மாறாமல் வைத்திருக்க உதவும், பிளாஸ்டிக்-க்கு மாற்றான பை.
துளைகள் உள்ள துணிப் பைகள்
ஆர்கானிக் காட்டன் பேக்கை போலவே இருக்கும் இதில், காற்றோட்டத்தை அனுமதிக்கும் வகையில் கூடுதலாக துளைகள் இருக்கும். அது குளிரோட்டத்துக்கு உதவி, காய்கறிகளை ஃப்ரெஷ் ஆக வைத்திருக்கும்.
ஃபுரோஷிகி கிச்சன் டவல் (Furoshiki Kitchen Towel)
ஃபுரோஷிகி கிச்சன் டவல் என்பது, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடியது. குளிர்சாதனப் பெட்டியில் பிரெட், சாண்ட்விச் போன்றவற்றை இதில் சுற்றி வைக்கலாம்.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், அல்லது கண்ணாடி கொள்கலன்கள்
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், அல்லது கண்ணாடி கொள்கலன்களில் உணவுப் பொருள்களை சேமித்து ஃபிரிட்ஜில் வைக்கலாம்.
கீரைகளை சேமிக்கும் முறை
* எந்த வகை கீரையாக இருந்தாலும், அவற்றை வாங்கி வந்த பின் முதலில் சுற்றியிருக்கும் கயிறு, ரப்பர் போன்றவற்றை எடுக்கவும்.
* தண்ணீரில் நன்றாக அலசி தனியாக எடுத்துவைக்கவும்.
* இதனை ஒரு பருத்தி துண்டில் தளர்வாக சுற்றி வைக்கவும். கீரையை இறுக்கமாகச் சுற்றியபடி சேமித்தால், அழுகுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே துண்டில் ஈரம் முழுவதும் உறிஞ்சப்பட்டு கீரை உலர்ந்தவுடன், அதை ஒரு கண்ணாடி கொள்கலனில் வைத்து, குளிர்சாதனப்பெட்டியின் குளிர்ந்த பகுதியில் வைக்கவும்.
காய்கறிகளை சேமிக்கும் முறை
* காய்கறிகளை கடையில் இருந்து வாங்கி வந்தவுடன் நன்றாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். ஈரம் போக உலர்த்தவும்.
* கண்ணாடி கொள்கலன், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது துணிப் பைகளில் போட்டு ஃபிரிட்ஜில் வைக்கவும்.
* கிழங்கு வகைகளை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. வெளியிலேயே வைக்கவும்.

பழங்களை சேமிக்கும் முறை
* பழங்கள் பழுக்கும் வரை வெளியே வைத்திருந்துவிட்டு, பழுத்த பின்னர் காகிதப் பைகளில் வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம். ஆனாலும் அதிக நாள்களுக்கு வைக்காமல் குறிப்பிட்ட நாள்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
* செர்ரி, திராட்சை போன்ற பழங்களை கழுவிய பின்னர் ஈரப்பதம் இல்லாமல் உலர்த்தி, காற்றுப் புகாத ஸ்டீல், கண்ணாடி கொள்கலனில் வைத்து சேமிக்கலாம்.
* சிட்ரஸ் பழங்களை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம், அவற்றை வெளியில் வைப்பது நல்லது.