“கோவையில் பாஜக போராட்டத்தை தவிர்க்க வேண்டும்; ஏனென்றால்…”- கே.பாலகிருஷ்ணன்

கோவையில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில், பாஜக போராட்டத்தை தவிர்க்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன், “1998 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், அதற்கு பிறகு ஒரு பதற்றம் கோவையில் ஏற்பட்டுள்ளது. கோவையில் ஒரு ஆபத்து இருப்பது தெரிய வருகிற சூழலில் தமிழக காவல்துறை டிஜிபி துரிதமாக செயல்பட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டார். மேலும் தமிழக முதல்வர் இந்த வழக்கை என்ஐஏ-விற்கு மாற்றி இருப்பது பாராட்டத்தக்கது.
மேற்கொண்டு இவ்விஷயத்தில் தமிழக அரசு உளவுத்துறை செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய வேண்டும். உளவுத்துறையை மேலும் பலப்படுத்த வேண்டும். அதேபோல என்ஐஏ புலனாய்வு செய்ததிலும் குறைபாடு உள்ளதை கருத்தில் கொள்ள வேண்டும்.
image
என்ஐஏ-ல் கூட முன்கூட்டியே கைது செய்யப்பட்டவர்கள் குறித்து கண்காணிக்கப்படாதது கேள்விக்குறியாகி இருக்கிறது. கோவையில் மத அடிப்படையில் மக்களை பிரித்துப் பார்க்காமல் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அனைத்துக் கட்சி கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் நடத்தி அமைதியை நிலை நாட்ட வேண்டும். பாஜக 31 ஆம் தேதி நடத்த இருக்கும் பந்த் தேவையா என்பதை யோசிக்க வேண்டும். மட்டுமன்றி அரசியல் ஆதாயத்தோடு நடத்தப்படும் போராட்டங்கள் தேவையா என மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
பதற்றமான சூழ்நிலையில் போராட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டியது. விசாரணை நடைபெறுவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவிப்பதையும் தவிர்க்க வேண்டும். யாரோ சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களையும் குற்றம் சுமத்த முடியாது” என்றார்.
மேலும் பேசுகையில், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் அன்றைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.