தலை தீபாவளி 2022! | சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

தீபாவளி படையல சாமிக்கு போட்டுட்டு, பூஜை செய்ய மகன் மருமகள் வருகைக்காக ஆவலாய் எதிர்நோக்கி, தெருவுக்கும் வீட்டுக்கும் குட்டிபோட்ட பூனைபோல அலைந்து கொண்டு இருந்தாள், ஒத்த புள்ளபெத்த “ராஜாவின்” தாய் “கமலம்”.

கடன உடன வாங்கி, பெரிய பெரிய படிப்பு படிக்க வைத்து, உயர் பதவியில் அரசுவேலை வாங்கி கொடுத்து, தன் ஒரே அருமை மகன் தங்கள் அருகிலேயே இருக்க வேண்டும் என்ற நப்பாசையில் , வீட்டின் வெகு அருகாமையிலேயே மருமகளையும் தேடிக்கொண்டாள் கமலம்.

ஆனால் “நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்” எனும் பழமொழிக்கு ஏற்ப, மகன் ராஜாவோ வீட்டோடு மாப்பிள்ளையாக மாமியார் வீட்டில் சங்கமம் ஆகிவிட, தரையில் வீசிய மீன்போல் துடிதுடித்து போனாள் கமலம்.

இன்று அவனுக்கு “தலை தீபாவளி” என்பதால், நேற்றே மருமகளுக்கும் மகனுக்கும் போன் போட்டு கெஞ்சி கூத்தாடி, காலை தீபாவளி படையலுக்கு அவசியம் வருமாறு வேண்டி விரும்பி அழைக்கிறாள்!

ஆனால் அவர்கள் இன்னும் பூஜைக்கு வராததால், மனம் வருந்தி இருவருக்கும் மாற்றி மாற்றி போன் போட்டு பார்த்தாள். மகனின் போன் “சுச் ஆஃப்” செய்யப்பட்டிருந்தது. மருமகளோ வழக்கம்போல் “ரிங்” போனதும், பெயரை பார்த்து, ஃபோனை கட் பண்ணினாள்.

Representational Image

மகனுக்கு பிடித்தமான முந்திரி சேர்த்த இனிப்பு போண்டா, சூயம்,பால் கொழுக்கட்டை, தோசை வடகறி, கேசரி என அனைத்து பலகாரங்களும் செய்து அவன் வரவுக்காக கண்ணில் நீர் தளும்ப காத்திருக்கிறாள்.

ராஜாவின் அப்பாவோ விரக்தியால் “ஏண்டி ! பூஜைக்கு வர அவனுக்கு மனசில்ல. உம் மருமகளுக்கு நம்ம கண்டால சுத்தமா புடிக்கல. இதுல எதுக்கு அவனுக்கு ஃபோன் பண்ணி பண்ணி தொந்தரவு செய்ற!” என்று பொய்கோபத்துடன் கூறினாலும், தீபாவளி நாளில் தன் மகன் இல்லாமால் இதுவரை அவர் சாப்பிட்டதே இல்லை, என்பதால் அவர் விழிகளும் பனித்திருந்தது.

மீண்டும் மருமகளுக்கு ஃபோன் போட, அவள் இவர்கள் இம்சை தாங்காமல் எப்படியோ மனம் இரங்கி போன் எடுக்க”அம்மா! சீக்கிரம் வாங்க! படையல் போட்டு காத்துகிட்டு இருக்கேன்! உங்களுக்காக புது துணி பலகாரம் எல்லாம் பண்ணி வச்சிருக்கேன்! ஒரு நட வந்து சாப்ட்டுட்டு போய்டுங்க தாயி ! மாமா வேரா உங்களுக்காக காலைல இருந்து எதுவும் சாப்பிடாம, பூஜை செய்ய காத்துக்கிட்டு இருக்கார்மா” என கூற

மறுமுனையில் மருமகள் கொட்டாவியுடன் “அத்த! அவர் நல்லா தூங்கிகிட்டு இருக்கார். நேத்து ஆபீஸ்ல ரொம்ப வேல… எனக்கு ஒரே தலைவலியா இருக்கு. நீங்க பூஜை செய்து சாப்டுங்க! எங்களால வர முடியாது அத்த” என கட் அண்ட் ரைட்டா தீர்த்து சொல்ல, அப்படியே மனமுடைந்து போய் நிற்கிறாள்.

தான் , இந்த வயதிலும் …

காலை முணு மணிக்கே கண் முழிச்சி கஷ்டப்பட்டு செய்த பலகாரங்கள் நிராகரிக்கப்படுவதை எண்ணி… தாரை தாரையாக கண்ணீர் விட்டு, அவமானத்தால் கூனி குறுகி நிற்கிறாள்.

அவளிடம் அன்பாய் வாலை குழைத்து நேசமாக பழகும் நான்கு தெருநாய்கள் ஆவலுடன் ஓடிவந்து நிற்க, அவள் அந்த படையல் பலகாரத்தை நாய்களுக்கு சமர்ப்பித்து ஏதோ ஒரு தனிமை தன்னை சூழ்வதுபோல்…

முதல் முறையாக உணர்கிறாள்!

அந்த நன்றியுள்ள நாய்கள்…

தன் பலகாரங்களை பசியுடன் உண்பதை கண்ணிமைக்காமல் விரக்தியுடன் உற்று பார்த்தவண்ணம், அப்படியே

சிலையாகி நிற்கிறாள்.

ராஜாவின் அப்பாவோ

கிழட்டு சிங்கம் போல், ஈஸி சேரில் அமர்ந்து பொங்கி வரும் கண்ணீரை மறைக்க “தினத்தந்தி” நாளிதழை விரித்து படிப்பதுபோல் பாவனை செய்கிறார்!

“தலை தீபாவளிகள்” காலப்போக்கில் தலைகீழாய் மாறிப்போவது…

இயற்கை சுழற்சியின் ,தவிர்க்க இயலாத மாற்றங்கள், என்பதை இவர்கள் மனது உள்வாங்கி உணர்ந்துகொள்ள இன்னும் சிலபல காலம் பிடிக்கும்போல!

(முற்றும்)

-மரு உடலியங்கியல் பாலா.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.