தமிழகத்தில் சேவை எண்கள்மூலம் தொடர்புகொண்டு ஏராளமானோர் பயனடைந்து வருவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் “நட்புடன் உங்களோடு மனநல சேவை திட்டத்தை” மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பல்வேறு பிரச்னைகளால் மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் 14416 என்ற இலவச எண் தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் எனத் தெரிவித்தார்.
மேலும் இந்த ஆலோசனை மையமானது அரசின் பிற சேவைகள் துறையுடன் இணைந்து மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் செயல்படும் எனக் கூறிய அவர், 104 இலவச எண் சேவை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இதுபோன்ற சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு சேவை சார்ந்த இலவச எண்கள் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்து வருவதாகவும், குறிப்பாக நீட் தேர்வு காலத்தில் பாதிக்கப்பட்ட மன அழுத்தத்திற்கு உள்ளான மாணவர்கள் சுமார் இரண்டு லட்சம் பேர் வரை தொடர்புகொண்டு நிவாரணம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
