சிட்னி,
டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இன்று சிட்னி மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா- வங்காளதேச அணிகளி மோதி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக்- பவுமா களமிறங்கினர்.
பவுமா தொடக்கத்திலேயே 2 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து டி காக்- ரூசோவ் ஜோடி இணைந்து வங்காளதேச அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இந்த ஜோடியை பிரிக்கமுடியாமல் வங்காளதேச பந்துவீச்ச்சாளர்கள் திணறினர்.
டி காக் 63 ரன்னில் அவுட்டானார். 2 வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 163 ரன்களை குவித்தது. மறுபுறம் தனது அதிரடியை தொடர்ந்த ரூசோவ், சதமடித்து அசத்தினார். இந்த டி20 உலகக்கோப்பையின் முதல் சதம் இதுவாகும். அவர் 56 பந்துகளில் 7 பவுண்டரி, 8 சிக்சருடன் 109 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி விளையாடி வருகிறது.