ரூபாய் நோட்டுகளில் கடவுள் படம்: பாஜகவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படத்துடன் லட்சுமி தேவி, விநாயகரின் படங்களையும் அச்சடிக்க வேண்டும். புதிய ரூபாய் நோட்டுகளில் இரு கடவுகளின் உருவங்கள் இருப்பது நாடு செழிக்க உதவும். நாம் என்னதான் முயற்சிகளை மேற்கொண்டாலும், கடவுள்களின் ஆசி இல்லையென்றால் சில சமயங்களில் நம்முடைய முயற்சிகளுக்குப் பலன் இருக்காது.” என்று யோசனை தெரிவித்தார்.

இந்தோனேசிய கரன்சி நோட்டுகளை எடுத்துக்காட்டாக கூறிய அவர், “இந்தோனேசியாவில், கரன்சி நோட்டுகளில் ஒரு பக்கம் விநாயகர் உருவம் இருக்கிறது. அது ஒரு முஸ்லிம் நாடு. அந்த நாட்டில் 85 சதவீதத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் இருக்கின்றனர். அவர்களால் அதைச் செய்ய முடிந்தால், நம்மாளும் அதை செய்ய முடியும். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு விரைவில் கடிதம் எழுதவிருக்கிறேன்.” என்றும் தெரிவித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த கருத்துக்கள் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை அடுத்து பஞ்சாபில் ஆட்சியை பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சி அடுத்ததாக குஜராத் தேர்தலை குறி வைத்துள்ளது. எனவே, வாக்கு அரசியலுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் இந்த கருத்தை தெரிவிப்பதாக பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். மகாத்மா காந்தியை ஓரங்கட்டும் விதமாக கெஜ்ரிவாலின் இந்த கருத்து இருப்பதாக கூறும் பாஜகவினர், இந்துக்களின் வாக்குகளுக்காக அவர் இதுபோன்று பேசுவதாகவும் கூறுகின்றனர்.

இந்த நிலையில், ரூபாய் நோட்டுகளில் கடவுள்களின் படத்தை அச்சிட கோரிக்கை விடுத்த விவகாரத்தில் பாஜகவினருக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்துள்ளார். தலைநகர் டெல்லியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையொட்டி, காஜிப்பூர் குப்பை கிடங்கில் ஆய்வு செய்த கெஜ்ரிவால், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வாக்கு அரசியலுக்காக ரூபாய் நோட்டில் கடவுள்களின் படத்தை அச்சிட வலியுறுத்துவதாக பாஜகவினர் எழுப்பும் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அரவிந்த் கெஜ்ரிவால், வாக்குகளை கவரும் என்று பாஜக நினைத்தால் அதை அமல்படுத்த வேண்டும் என்றார். “எனது கோரிக்கை வாக்குகளைக் கவரும் என்று பாஜக நினைத்தால் அதை அவர்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும். அவர்கள்தான் மத்திய அரசை நடத்துகிறார்கள். இதை நடைமுறைப்படுத்தி வாக்குகளை பெற வேண்டும்.” என்று கெஜ்ரிவால் பதிலளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.