20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நெதர்லாந்து அணியுடன் இந்தியா இன்று மோதல்

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்றில் இந்திய அணி குரூப்2-ல் அங்கம் வகிக்கிறது. தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை கடைசி பந்தில் தோற்கடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்து நெதர்லாந்துடன் இன்று (வியாழக்கிழமை) சிட்னியில் மோதுகிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான திரில்லிங்கான ஆட்டத்தில் 160 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்தியா விராட் கோலியின் (82 ரன்) பிரமாதமான பேட்டிங்கால் இறுதிபந்தில் வெற்றியை வசப்படுத்தி நிம்மதி பெருமூச்சு விட்டது. இனி இந்திய அணி நெருக்கடி இன்றி விளையாடலாம். அதுவும் நெதர்லாந்து, குட்டி அணி என்பதால் அதிக சிரத்தை எடுக்க வேண்டிய தேவை இருக்காது.

ஆனாலும் ரன்ரேட் அவசியம் என்பதால் பெரிய வித்தியாசத்தில் வெற்றியை ஈட்டுவதில் நமது வீரர்கள் கவனம் செலுத்துவார்கள். தனது கடைசி 5 ஆட்டங்களில் வெறும் 64 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள கேப்டன் ரோகித் சர்மா பழைய நிலைக்கு திரும்புவதற்கு இந்த ஆட்டம் அருமையான வாய்ப்பாகும்.

சாதனையின் விளிம்பில் உள்ள முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்னும் 73 ரன்கள் எடுத்தால் 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற பெருமையை பெறுவார். இதே மைதானத்தில் தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நியூசிலாந்து 200 ரன்கள் குவித்தது. எனவே இந்திய வீரர்களும் ரன்மழை பொழிவார்கள் என்று நம்பலாம்.

அதே சமயம் ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்திடம் நெருங்கி வந்து தோற்றது. அந்த ஆட்டத்தில் 145 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து, 135 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதே போன்ற போராட்டத்தை இந்த ஆட்டத்திலும் வெளிப்படுத்த முயற்சிப்பார்கள்.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் நெதர்லாந்து அணி, இந்தியாவுடன் இதற்கு முன்பு மோதியதில்லை. ஆனால் ஒரு நாள் போட்டியில் 2 முறை மோதி இரண்டிலும் நெதர்லாந்து தோற்று இருக்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.