மதுக்கரை: கோவையில் நடந்த கார் வெடிப்பு திட்டமிட்ட தாக்குதல் என தனியார் கல்லூரியில் நடந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார். கோவை நவக்கரை பகுதியில் தனியார் கல்லூரியில் நடந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என் ரவி பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது: பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பாரதம் உருவானது. ஆயிரம் ஆண்டுகளாக பாரதத்தின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. நவீன அறிவியல் தொழில்நுட்ப கல்வியோடு சேர்த்து பாரத பண்பாடுகளோடு கூடிய கல்வி முறை தேவைப்படுகிறது. தமிழகம் பல முனிவர்கள், யோகிகளை கொண்டிருந்த மண். யோகாவை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளது.
சிறந்த ஆளுமையால் இந்தியா வழி நடத்தப்பட்டு வருகிறது. யோகாவையும், இயற்கை மருத்துவத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தீவிரவாதம் நாட்டின் பெரும் பிரச்னையாக உள்ளது. தீவிரவாத தாக்குதல் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கிறது. தீவிரவாதம் அனைத்திற்கும் எதிரானதாக உள்ளது. கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு ஒரு திட்டமிட்ட தாக்குதல். இது மிகவும் ஆபத்தானது. அதிக அளவிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறையின் நடவடிக்கை பாராட்டத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார்.