திருவனந்தபுரம்: கேரளாவில் பந்த் நடத்த அழைப்பு விடுத்த பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவின் தலைவர்களில் ஒருவரான அப்துல் ரவுப் கைது செய்யப்பட்டார். பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா, மற்றும் அதன் 8 துணை அமைப்புகளுக்கு கடந்த மாதம் ஒன்றிய அரசு 5 வருடங்களுக்கு தடை விதித்தது. அதற்கு முன்பாக, பல்வேறு மாநிலங்களில் இந்த அமைப்பின் அலுவலகங்கள்,. தலைவர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு, ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து கேரளாவில் கடந்த மாதம் பாப்புலர் பிரன்ட் அமைப்பு நடத்திய பந்த்தில், வன்முறை வெடித்தது. இதனால், அரசுக்கு ரூ.5 கோடி நஷ்டம் ஏற்பட்டது.
இது தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த நஷ்டஈடு தொகையை செலுத்தினால் மட்டுமே, கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க முடியும் என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்தது. பந்த்துக்கு அழைப்பு விடுத்த தலைவர்களையும் கைது செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, பந்திற்கு அழைப்பு விடுத்த பாப்புலர் பிரன்ட் அமைப்பின் தலைவர்களான அப்துல் சத்தார், முன்னான் மாநில செயலாளர் அப்துல் ரவுப் தலைமறைவாகினர். சில வாரங்களுக்கு முன்பு சத்தார் கைது செய்யப்பட்டார். ரவுப் தலைமறைவாக இருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு அவர் தனது வீட்டுக்கு வந்திருப்பதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, அங்கு சென்று அவரை கைது செய்தனர்.