மாகாண சபை தேர்தலை விரைவுபடுத்த ஒன்றிணையுமாறு அமைச்சர் டக்ளஸ் பகிரங்க அழைப்பு

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்தும் நோக்கில் தமிழ் தரப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்மூலம் மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவுபடுத்த முடியும் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் அனைத்து தரப்புக்களையும் ஒன்றிணைத்து செயற்படுத்துவதற்கான ஆர்வத்தினை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த அரசியல் சூழலை தமிழ் தரப்புக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

குறுகிய நலன்களையும், தேர்தல் அரசியல் பற்றிய சிந்தனைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு,

அனைத்து தமிழ் தரப்புக்களினதும் முயற்சிகள் மற்றும் தியாகங்களின் பலனாக கிடைத்த மாகாண சபைகளை செயற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஒன்றிணைந்து செயற்பட அனைவரும் முன்வரவேண்டும்.

அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாண சபைகளை செயற்படுத்துவதன் மூலம் அதனைப் பாதுகாத்துக் கொண்டு, ஒவ்வொரு தரப்பினரும் தாங்கள் எதிர்பார்க்கின்ற அபிலாசைகளை வென்றெடுப்பது பற்றி சிந்திப்பதே ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்கும்.

கடந்த காலங்களில் கிடைத்த சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டமையைப் போன்று, தற்போதைய அரசியல் சூழலையும் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள அனைவரும் முன்வரவேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

ஊடகப் பிரிவு:- கடற்றொழில் அமைச்சர் – 28.10.2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.