`அண்ணாமலை புகார் அபத்தமானது’ – காவல்துறை அறிக்கையும், `பதில் அளிக்கப்படும்' என்ற அண்ணாமலை ட்வீட்டும்

கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியிருந்தது. அரசியல் வட்டாரங்களிலும் இது பேசுபொருளானது. அதையடுத்து இந்த வழக்கு என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில் தமிழ்நாடு மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, `கோவையில் நடந்தது தீவிரவாத தாக்குதலே. இனியும் தமிழக அரசு மூடிமறைக்க முடியாது’ என்று கூறியிருந்தார். மேலும், `யாரை காப்பாற்றுவதற்காக போலீஸ் அனைத்தையும் மூடி மறைக்கிறது?. உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இந்த சம்பவம் தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை வைத்துள்ளோம்” என்று அண்ணாமலை கூறியிருந்தார்.

அண்ணாமலை

இந்த நிலையில் அண்ணாமலைக்கு பதில் தரும் விதமாக தமிழ்நாடு காவல்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்குகிறது. அதில், “பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, அதுவும் வெடித்து சிதறிய சிலிண்டர், மற்றும் காரில் சேகரிக்கப்பட்ட பொருள்கள் என்ன என்பதை ஆய்வு செய்யும் முன்பே அது என்ன என்று பல கருத்துக்களைக் கூறி புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சி செய்கிறார். இந்த வழக்கை தாமதமாக என்.ஐ.ஏ-விற்கு அனுப்பியதாக கூறுகிறார்.

தமிழ்நாடு காவல்துறை

இது போன்ற நிகழ்வுகள் நடந்த உடன் வழக்கு பதிவு செய்வதும் விசாரணை நடத்துவதும் உள்ளூர் காவல் துறைதான். எல்லா மாநிலத்திலும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. இதுதான் சட்டம். விசாரணையில் பயங்கரவாத தடுப்பு சட்டப்பிரிவு (UAPA) சேர்க்கப்பட்டலோ அல்லது தேசிய புலனாய்வு முகமை சட்டம் 2008-ல் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் உள்ள சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டாலோ, தேசிய புலனாய்வு முகமை சட்டப் பிரிவு 6-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்ட காவல் நிலைய அதிகாரி, மாநில அரசாங்கத்துக்கு உடனடியாக ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையைப் பெற்றவுடன், மாநில அரசு, ஒன்றிய அரசுக்கு விரைவில் தெரியப்படுத்த வேண்டும். அந்த அறிக்கையைப் பெற்றவுடன், ஒன்றிய அரசு, 15 தினங்களுக்குள், வழக்கின் தன்மைக்கேற்ப, தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு ஆணை பிறப்பிக்கும். இதுதான் சட்டம்.

முதல்வர் ஸ்டாலின்

கோவையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடித்த வழக்கில், இந்த சட்ட நடைமுறை, எந்த தாமதமுமின்றி முறையாக பின்பற்றப்பட்டு, மாநில அரசு, ஒன்றிய அரசிற்கு முறையாக அறிக்கையை அனுப்பி, அதன்பிறகு, வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆனால் இந்த வழக்கில், ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பிக்கும் முன்னரே தமிழக முதல்வர் அவர்கள் கோவை கார் வெடிப்பு நிகழ்வை என்.ஐ.ஏ விசாரிக்க பரிந்துரை செய்தார். இதில் எங்கே தாமதம் வந்தது?

அண்ணாமலை

தற்போது திடீரென்று வெடிகுண்டு நிகழ்வு கோவையில் நடக்கப் போவதாக புதுடெல்லி உள்துறை அமைச்சகம் முன்பாகவே எச்சரித்ததாக புகார் கூறுகிறார். இது அபத்தமானது. அவர் குறிப்பிடுவது, புது டெல்லி உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும அனுப்பப்பட்ட பொதுவான சுற்றறிக்கை ஆகும். இதில் கோவை சம்பவம் பற்றி எந்த இடத்திலும் கூறப்படவில்லை. எனவே இது போன்ற உண்மையில்லாத மிகைபடுத்தப்பட்ட செய்திகளையும், வதந்திகளையும் முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்” என தமிழ்நாடு காவல்துறை குறிப்பிட்டிருக்கிறது.

இந்நிலையில் அண்ணாமலை ட்விட்டரில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக, “தமிழக காவல்துறையின் அறிக்கைக்கு விரைவில் பதில் தெரிவிக்கப்படும். நமது மாநில காவல்துறையின் டிஜிபி மற்றும் ஏடிஜிபி (int) ஆகியோர் அறிவாலய அலுவலகத்தினர் போல் நடந்து கொள்கிறார்கள்.காவல் துறையின் உயர் பதவிகள் அரசியல் மயமாக்கப்படுவதைக் கண்டு வருத்தமாக இருக்கிறது.

எங்கள் புகார், குறிப்பாக இரண்டு உயர் அதிகாரிகள் தங்கள் அடிப்படை கடமைகளை தவறியதற்கு எதிராக தான் இருந்தது. அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தமிழ்நாடு காவல்துறை என்ற பெயரில் ஒரு செய்திக்குறிப்பைக் கொடுத்ததில் ஆச்சரியமில்லை.

காவல்துறையின் மனஉறுதியைக் குலைத்ததாக எங்களைக் குறை கூறாமல், தவறு எங்கு நிகழ்ந்தது என்று சரியாக ஆய்வு செய்ய வேண்டும்.

பல ஆண்டுகளாக சம்பாதித்த தமிழக காவல்துறையின் பெரும் பெயரை தங்களின் முட்டாள்தனமான அரசியல் தந்திரங்களால் கீழ் இழுத்துச் செல்வது அவர்களே தவிர நான் அல்ல.” என்று பதிவிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.