லக்னோ: உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கான். கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் அப்போதைய ராம்பூர் மாவட்ட ஆட்சியர் ஆஞ்சநேய குமார் ஆகியோருக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆசம் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து சட்டப்பேரவை உறுப்பினராக நீடிக்கும் தகுதியை ஆசம் கான் இழந்துள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் பிரதீப் துபே நேற்று முன்தினம் அறிவித்தார். அதனால் ஆசம் கான் எம்எல்ஏ.வாக இருந்த ராம்பூர் சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதனால் அங்கு இடைத்தேர்தல் நடக்கும்.
குற்ற வழக்கில் தண்டிக்கப்படும் எம்.பி. அல்லது எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை பெறுவதற்கு 3 மாதம் அவகாசம் அளிக்கும் மக்கள் பிரதிநித்துவ சட்டப்பிரிவு 8(4) சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் கடந்த 2013-ல் தீர்ப்பளித்தது. இதன்படி குற்ற வழக்கில் தண்டிக்கப்படும் ஒருவர், தண்டிக்கப்பட்ட நாளில் இருந்து எம்பி. அல்லது எம்எல்ஏ பதவி வகிக்கும் தகுதியை இழக்கிறார். இந்த தகுதி நீக்கம் அவர் விடுதலை பெற்ற நாளில் இருந்து மேலும் 6 ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதுவரை அவர் தேர்தலில் போட்டியிட முடியாது.