ஒசூர்: உத்தரபிரேத மாநிலம் வாரணாசியைச் சேர்ந்தவர் ராம்கேவர் (27). இவர் மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன், நேற்று முன்தினம் நள்ளிரவு ஓசூர் வந்தார். ஓசூர் அருகே மகாதேவபுரம் கிராமத்தில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்வதற்காக வந்த இவர்கள், நள்ளிரவில் பஸ் இல்லை என்பதால், பஸ் ஸ்டாண்டிலேயே தூங்கினர். நேற்று அதிகாலை 5 மணியளவில் எழுந்து பார்த்த போது, 6 மாத பெண் குழந்தையை காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர்கள், அக்கம்பக்கம் தேடியும் குழந்தை கிடைக்காததால் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தனர்.
ஆட்டோ டிரைவர் ஒருவர் அளித்த தகவலின்பேரில் ஓசூர்-ராயக்கோட்டை சாலையில், கடத்தப்பட்ட குழந்தையுடன் அமர்ந்திருந்த பெண்ணை, நேற்று மதியம் 12 மணியளவில் போலீசார் கண்டுபிடித்தனர். விசாரணையில், அவர் பெங்களூருவைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பது தெரியவந்தது. பின்னர், அவரிடம் இருந்த குழந்தையை மீட்ட போலீசார், அதன் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.