சீன கடன் செயலிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: சீன கடன் செயலிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீப காலமாக  ஆன்லைன் மூலம் கடன்கள் வழங்கப்படுகின்றன. ஆதார் மற்றும் செல்போன் எண் போன்ற தகவல்களை தருவதன் மூலமாக தனிநபர் கடன் எளிதாக வழங்கப்படுகிறது. குறிப்பாக, சீன கடன் செயலிகள் மூலம் கடன்கள் அளிக்கப்பட்டு, பின்னர் மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன. எளிதாக கடன் கொடுப்பதைப் போல கொடுத்துவிட்டு அதற்கு பிறகு அதிக பணம் கேட்டு கொடுக்கும் தொல்லைகளால் பலர் தற்கொலை செய்து உள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே ஏராளமான சீன கடன் செயலிகளை ஒன்றிய அரசு தடை செய்துள்ளது.

இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சகம்  அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், ‘சட்ட விரோத கடன் செயலிகளால் நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் பொதுமக்களின் உயிருக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சீன நிறுவனங்கள் தொடர்புடைய கடன் செயலிகள் குறித்து அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளது.  எனவே, இந்த செயலிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான தொழில்நுட்ப உதவிகளுக்கு தேசிய சைபர் குற்ற தடயவியல் ஆய்வுகூடத்தின் சேவையை பெற்று கொள்ளலாம்,’ என கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.