விருதுநகர்: பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜைக்குச் செல்லும் வாகனங்களில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.
பசும்பொன்னில் 115-வது முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் 60-வது தேவர் குரு பூஜை இன்று (அக்.30) நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இருந்து மரியாதை செலுத்த செல்பவர்கள் சொந்த வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களில் மட்டுமே சென்று வர அனுமதிக்கப்பட்டனர்.
மோட்டார் சைக்கிள்கள், டிராக்டர், ஆட்டோ, டாடா ஏஸ் போன்ற வாகனங்கள் மூலமாகவோ சைக்கிள் மற்றும் திறந்த வெளிவாகனங்களில் பயணம் செய்யவோ, நடை பயணமாகவோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சொந்த கார்களில் செல்வோர் சம்பந்தப்பட்ட உட்கோட்டஅலுவலகங்களில் முன்அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதிச்சீட்டினை பயணத்தின்போது வாகனத்தின் முன்புறக் கண்ணாடியில் ஒட்டியிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வாகனங்கள் நேற்று பசும்பொன் சென்றன. இந்த வாகனங்கள் அனைத்தையும் விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியில் நிறுத்தி ஆயுதங்கள், மது பாட்டில்கள் உள்ளதா? என்று போலீஸார் சோதனை நடத்தினர்.
அதோடு வாகனத்துக்கு அனுமதி அட்டை பெறப்பட்டுள்ளதா?, வாகனத்தின் உரிமையாளர் யார்?, வாகனத்தின் அசல் பதிவுச் சான்று, ஓட்டுநர் உரிமம், வாகனக் காப்பீடு ஆகியவை குறித்தும் ஆய்வு செய்தனர். அதன் பிறகே வாகனங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக மாவட்ட எல்லை வரை போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. வாகனங்கள் தணிக்கை செய்யப்படுவதை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மனோகர் ஆய்வு செய்தார்.