தென்கொரிய தலைநகர் சியோல் நகரில் இடாயிவொன் பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் ஹாலோவீன் திருவிழா மிகவும் பிரபலம். இறந்தவர்களை மகிழ்விப்பதாக கருதி இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பேய்கள், சூனியக்காரிகள், எலும்புக்கூடுகள், பிசாசுகள் உள்ளிட்ட உடைகளை அணிந்து கொண்டு நடனமாடிக் கொண்டே செல்வர். மேலும் பயமுறுத்தி விளையாடுவது, விருந்துகளில் பங்கேற்பது, கதைகள் படிப்பது, படங்கள் பார்ப்பது போன்ற விஷயங்களில் ஈடுபடுவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் ஹாலோவீன் திருவிழா களையிழந்து காணப்பட்டது. இந்நிலையில் கொரோனாவிற்கு பிறகான ஹாலோவீன் விழாவை வெகு விமர்சையாக கொண்டாட தென்கொரிய மக்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் மிகக் கொடூரமான திருவிழாவாக முடிந்திருக்கிறது.
சுமார் ஒரு லட்சம் பேர் தெருக்களில் கூடினர். ஹாலோவீன் கொண்டாட்டங்களை களைகட்டின. நெரிசல் அதிகமாக தொடங்கியது. ஒருவருக்கொருவர் முண்டியடித்து செல்ல விரும்பினர். இப்படியான சூழல் கடும் நெரிசலில் கொண்டு போய் விட்டது. மூச்சுத்திணறியும், மிதிபட்டும் பலர் காயமடைந்தனர். நெரிசல் விபரீதமாகி அடுத்தடுத்து பலியாக தொடங்கினர். சம்பவம் குறித்து தகவலறிந்து போலீசார், தீயணைப்புத் துறையினர், மீட்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் காயம்பட்ட நபர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளில் அனுமதித்தனர். அதற்குள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியிருந்தனர். தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி இதுவரை 149 பேர் பலியாகியுள்ளனர்.
150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த நெரிசலுக்கான காரணம் குறித்து இதுவரை சரியான காரணம் எதுவும் தெரியவில்லை.
மகிழ்ச்சியாக கொண்டாட திட்டமிட்டிருந்த ஹாலோவீன் திருவிழா, இப்படி விபரீதத்தில் முடிந்தது ஒட்டுமொத்த நாட்டையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஹாலோவீன் விழாவில் நடந்த உயிரிழப்புகள் குறித்து பேசிய தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல், இன்றைய தினம் நாடு முழுவதும் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். சியோல் நகரில் நடந்த பெரும் துயரமான நிகழ்வு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது எனக் குறிப்பிட்டார்.