குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து | ஒரே நேரத்தில் 100 பேர் மட்டுமே நிற்க வேண்டிய இடத்தில் 500 பேர் வரை அனுமதி

மோர்பி: குஜராத் மாநிலம் மோர்பி நகரில் தொங்கு பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 141-ஆக உயர்ந்துள்ளது.

குஜராத்தின் சவுராஷ்டிரா பிராந்தியத்தில் மோர்பி நகர் அமைந்துள்ளது. 1889-ல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அங்குள்ள மச்சூ நதியின் குறுக்கே, மன்னர் வாக்ஜி தாகோரால் தொங்கு பாலம் கட்டப்பட்டது. 233 மீட்டர் நீளம், 1.25 மீட்டர் அகலத்தில், ஐரோப்பிய பாணியில் இப்பாலம் கட்டப்பட்டது. தர்பார்கர் அரண்மனை, லக்திர்ஜி பொறியியல் கல்லூரியை இணைக்கும் இந்தப் பாலம் பலமுறை புனரமைக்கப்பட்டு உள்ளது.

இந்தப் பாலத்தை 15 ஆண்டுகளுக்குப் பராமரிக்கும் ஒப்பந்தத்தை மோர்பி மாநகராட்சி நிர்வாகம், ஒரிவா என்ற தனியார் நிறுவனத்துக்கு கடந்த மார்ச் மாதம் வழங்கியது. அந்த நிறுவனம் ரூ.2 கோடியில் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டது. கடந்த அக். 26-ம் தேதி, குஜராத் புத்தாண்டு தினத்தில் தொங்கு பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், ஏராளமான பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் பாலத்தைக் காண வந்தனர். தொங்கு பாலத்தில் நடந்து செல்ல பெரியவர்களுக்கு ரூ.17, சிறியவர்களுக்கு ரூ.12 கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதிக வசூலுக்கு ஆசைப்பட்டு, பாலம் பராமரிப்பு ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள ஒரிவா நிறுவன ஊழியர்கள் ஏராளமான பார்வையாளர்களை பாலத்தில் அனுமதித்தனர். அன்று மாலை 6.30 மணியளவில் 500-க்கும் மேற்பட்டோர் பாலத்தில் நின்றிருந்தனர். திடீரென பாரம் தாங்காமல் பாலம் உடைந்து விழுந்தது. பாலத்தின் மீது நின்றிருந்த அனைவரும் நதியில் விழுந்தனர்.

விமானப் படையின் கருடா வீரர்கள், கடற்படை வீரர்கள், தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீஸார், உள்ளூர் மக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனர். முதல் நாள் 25 குழந்தைகள் உட்பட 60 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. நேற்று மேலும் 81 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 141-ஆக உயர்ந்துள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள்.

மேலும், 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சுமார் 100 பேர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் பலரைக் காணவில்லை. நதியின் ஆழத்தில் அவர்கள் சிக்கியிருக்கக்கூடும் என்பதால், தொடர்ந்து மீட்புப் பணி நடைபெறுகிறது.

இந்தப் பாலத்தில் ஒரே நேரத்தில் 100 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஆனால், 500-க்கும் மேற்பட்டோர் பாலத்தில் நின்றிருந்ததால், பாரம் தாங்காமல் பாலம் உடைந்து விழுந்துள்ளது.

இது தொடர்பாக ஐஏஎஸ்அதிகாரி ராஜ்குமார், மூத்த பொறியாளர் கே.எம்.படேல், அகமதாபாத் எல்.இ. பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் கோபால், சாலை, கட்டுமானத் துறை அதிகாரி சந்தீப் வாசவா, ஐபிஎஸ் அதிகாரி சுபாஷ் திரிவேதி ஆகியோர் கொண்ட உயர்நிலை விசாரணைக் குழுவை மாநில அரசு நியமித்துள்ளது. இக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

காவல் துறை ஐ.ஜி. அசோக் யாதவ் கூறும்போது, “ஒரிவா நிறுவனத்தின் 2 மேலாளர்கள், பாலத்தைப் புனரமைத்த 2 பொறியாளர்கள், 3 பாதுகாவலர்கள், 2 டிக்கெட் விநியோக ஊழியர்கள் என 9 பேரைக் கைது செய்துள்ளோம்” என்றார்.

பிரதமர் தலைமையில் ஆலோசனை: இதற்கிடையில், குஜராத் தலைநகர் காந்தி நகரில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மோர்பி தொங்கு பாலம் விபத்து மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.