ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் 26ஆவது நினைவு தினம்

இலங்கையின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் 26ஆவது நினைவு தினம் இன்றாகும்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன, 1906 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் திகதி கொழும்பு சேதவத்த வளவ்வையில் பிறந்தார். டபிள்யூ ஜெயவர்த்தன மற்றும் ஹெலினா ஆக்னஸ் விஜேவர்த்தன ஆகியோரின் பதினொரு பிள்ளைகளில் மூத்தவராக இவர் பிறந்தார்.

கொழும்பு றோயல் கல்லூரியில் ஜே. ஆர். தனது ஆரம்பக் கல்வியை தொடர்ந்தார் அங்கு சிறுபராயம் முதலே கல்வியிலும் விளையாட்டிலும் அதிக ஆர்வத்தைக் காட்டி  திறமைகளையும் வெளிப்படுத்தினார்.  பேச்சு போட்டிகளிலும் பங்குபற்றி தம் திறமைகளை வெளிப்படுத்தவும் அவர் தவறவில்லை.

1921 இல் கொழும்பு றோயல் கல்லூரியின் சமூக சேவை லீக் என்ற அமைப்பின் தலைவரான இவர் இக்கல்லூரியின் கிரிக்கெட்  அணியிலும் அங்கம் வகித்தார்.

1925 இல் இக்கல்லூரி கிரிக்கெட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர் கல்லூரியின் உதைப்பந்தாட்ட அணியிலும், குத்துச் சண்டை அணியிலும், சாரணர் இயக்கத்திலும் அங்கம் வகித்தார்.

சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார் மற்றும் ஒரு வழக்கறிஞராக வாழ்க்கையை ஆரம்பித்தார்

1943 ஆம் ஆண்டு நடைபெற்ற களனி இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாநிலங்களவை உறுப்பினரான ஜே. ஆர். ஜயவர்தன ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது அதன் இணைப் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

1940ஆம் ஆண்டில் கொழும்பு நகர சபை உறுப்பினராக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். 1943ஆம் ஆண்டு அரச மந்திர சபைக்கு தெரிவானார். 1947ஆம் ஆண்டு களனி தேர்தல் தொகுதியிலிருந்து பாராளுமன்றத்தில் பிரவேசித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் ஆரம்ப உறுப்பினரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன. டி.எஸ். சேனநாயக்க அரசாங்கத்தில் நிதியமைச்சராக பணியாற்றினார்.

1973ஆம் ஆண்டு டட்லி சேனநாயக்கவின் உயிரிழப்பை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ பொறுப்பை ஏற்று ஐக்கிய தேசிய கட்சியை 1977ஆம் ஆண்டு தேர்தலில் மகத்தான வெற்றிக்கு வழிவகை செய்ததுடன் ,இலங்கையின் ஆறாவது பிரதமராக தெரிவானார்.

புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஏற்படுத்திய இவர் 1978ஆம் ஆண்டு பெப்ரவரி நான்காம் திகதி நாட்டின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். திறந்த பொருளாதார கொள்கை, மாகாண சபை முறை, விகிதாசார தேர்தல் முறை என்பவற்றை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தன தனது அரசியல் வாழ்க்கையில் விவசாய மற்றும் உணவு துறை அமைச்சராகவும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.