காற்றில் பறந்துசென்று மின்கம்பியில் விழுந்த கைகுட்டையை ஒட்டடை கம்பியால் எடுக்க முயன்ற மருத்துவமனை ஊழியர், மின்சாரம் தாக்கி பலியான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
தனது வீட்டுப்பால்கனியில் உலர வைத்த தனது கைக்குட்டை மின்கம்பியில் கிடப்பதை பார்த்து, அதனை எடுக்க,
முன் எச்சரிக்கையில்லா முயற்சியில் இறங்கி, உயிர் பலியான மல்லப்பா இவர் தான்..!
கர்நாடக மாநிலம் உதயஹிரி பகுதியில் வசித்த மல்லப்பா, ஹிம்ஸ் மருத்துவமனையில் கம்பவுண்டராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று, இவர் தனது வீட்டு பால்கனியில் உலரவைத்த கைக்குட்டை காற்றில் பறந்துசென்று வீட்டின் முன்பு உள்ள
மின் கம்பியில் சிக்கிக்கொண்டது.
இதனை பார்த்த மல்லப்பா, அந்த கைக்குட்டையை எடுப்பதற்கான முயற்சியில் இறங்கினார். வீட்டில் இருந்த ஒட்டடை கம்பியை எடுத்து, அதை துணி ஒன்றால் போர்த்தி பிடித்தபடி, மின்கம்பிகளுக்குள் சிக்கிக்கிடந்த கைக்குட்டையை பிடித்து நெம்பினார்.
அடுத்த நொடி, ஒட்டடை கம்பியின் மீது மின்கம்பி உரச, தீப்பொறியுடன் மின்சாரம் தாக்கியதில், மல்லாப்பா சம்பவ இடத்திலேயே பலியானார்.
எளிதில் எந்த பொருள் மின்சாரத்தை கடத்தும்-கடத்தாது என்ற போதிய விழிப்புணர்வு மல்லப்பாவுக்கு இல்லாததால், இரும்பாலான ஒட்டடை கம்பியை வைத்து, மின் கம்பியில் கிடந்த கைக்குட்டையை எடுத்ததால், மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அந்த கைக்குட்டையை அப்படியே போகட்டும் என்று விட்டிருந்தால் கூட, இந்த விபரீத நிகழ்வு நேர்ந்திருக்காது என்கின்றனர் காவல்துறையினர்.