தொங்கு பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய மாநிலமான குஜராத் முழுவதும் இன்று (02) துக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்திய குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்த 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் 8 மாத கால பராமரிப்பு பணிக்கு பின்பு கடந்த 26 ஆம் திகதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.
ஆனாலும் 30 அம் திகதி பாலம் இடிந்து விழுந்து பேரழிவை ஏற்படுத்தியது. இந்த பால விபத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 141 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 177 பேர் மீட்கப்பட்டும் உள்ளனர். சிலர் சிகிச்சையில் உள்ளனர். தொடர்ந்து மீட்பு, நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கமைய, குஜராத் முதல் மந்திரி பூபேந்திர பட்டேல் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், குஜராத்தில் பால விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நவம்பர் 2 ஆம் திகதி (இன்று) மாநிலம் முழுவதும் துக்கம் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய கொடி மாநிலத்தில் உள்ள அரசு கட்டிடங்களில் அரை கம்பத்தில் பறக்க விடப்படும். குஜராத்தில் இன்று ஒரு நாள் விழாக்களோ, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளோ எதுவும் நடைபெறாது என பதிவிட்டிருந்தார்.
இதன்படி, இன்று மாநிலம் முழுவதும் துக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில், மாநிலத்தில் இந்திய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.