நெல்லையை அடுத்த ராஜவல்லிபுரம் பகுதியில் உள்ள நடராஜன் என்பவரின் வீட்டில் சுவாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலைத் தடுப்புப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அந்த வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்த போலீஸார், நீதிமன்றத்தில் அதற்கான ஆணையைப் பெற்றனர்

இந்த நிலையில், இன்று (நவம்பர் 02) ராஜவல்லிபுரத்தில் உள்ள வீட்டில் சிலைத் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கோ, சப்-இன்ஸ்பெக்டர்கள் சகாயசெல்வின், சிபின்ராஜ்மோன் மற்றும் காவலர்கள் சென்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வீட்டில் ஐந்து உலோகச் சிலைகள் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஒன்றரை கிலோ எடை கொண்ட விநாயகர், அரை கிலோ எடையுள்ள இரு விநாயகர் சிலைகள், அரை கிலோ எடை கொண்ட ஏசு சிலை, 200 கிராம் எடை கொண்ட தாரா அம்மன் சிலை ஆகியவை நடராஜனின் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அந்தச் சிலைகள் வாங்கியதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இருக்கவில்லை. எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது பற்றியும் தெரியவில்லை.

அதனால் அந்தச் சிலைகள் அனைத்தையும் பறிமுதல் செய்த போலீஸார் அவை உலோகத்தால் செய்யப்பட்டவையா அல்லது ஐம்பொன் சிலையா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர். அதன் முடிவுகள் தெரியவந்த பின்னரே சிலைகளின் உண்மையான மதிப்பு என்ன என்பது தெரியும் என்று சிலைத் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.
சிலைகளை வைத்திருந்த நடராஜன் அவற்றை விற்பனை செய்வதற்காக இணையத்தில் பதிவிட்டதன் மூலம் போலீஸாரின் கவனத்துக்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் அவருக்கும் சிலைக் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்போது பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் ஏதேனும் கோயிலுக்குச் சொந்தமானவையா என்பதையும் போலீஸார் விசாரிக்கிறார்கள். அதற்காக பழைமையான கோயில்களில் கடந்த சில ஆண்டுகளில் சிலைகள் எதுவும் காணாமல் போயிருக்கிறதா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. நெல்லை அருகே உள்ள கிராமத்தில் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.