24 மணி நேர பாதுகாப்பு பணி: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை!

மழைக் காலம் முடியும் வரை மக்களின் பாதுகாப்பிற்காக 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டுமென தமிழக அரசுக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்து உள்ளார்.

இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

தமிழக அரசு, தொடர் கனமழையினால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளில் ஈடுபடவும், இயல்பு நிலை திரும்பும் வரை பாதுகாக்கவும், 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட முன்வர வேண்டும்.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனத் தெரிகிறது.

கனமழையால் அனைத்து தரப்பு மக்களும் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளில் தண்ணீர் புகுந்ததால் அவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அதி கனமழையானால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை ஏற்படுவதோடு, அதிக அளவிற்கு பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடும். எனவே இயல்பு நிலை திரும்பும் வரை பொது மக்களைப் பாதுகாக்க, தமிழக அரசும் அது சார்ந்த பல்வேறு துறைகளும் விழிப்புடன் செயல்பட்டு மக்களின் சிரமமில்லா, பாதுகாப்பான வாழ்க்கைப் பயணத்திற்கு துணை நிற்க மழைக்காலம் முடியும் வரை 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட முன்வர வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் தனது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.