இது சகோதர, சகோதரி உறவு – மம்தா பானர்ஜி குறித்து ஸ்டாலின் நெகிழ்ச்சி

சென்னையில் நடைபெறும் மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் கலந்துகொள்வதற்காக வந்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், “மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி பலமுறை சென்னை வந்துள்ளார். கலைஞர் கருணாநிதியின் திருவுருவச்சிலையை முரசொலி அலுவலகத்தில் அவர் வந்து திறந்துவைத்தது எங்களையும்,கலைஞரையும், திமுகவையும், தமிழ்நாட்டையும் பெருமைப்படுத்தியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக இருக்கக் கூடிய இல.கணேசன் அவர்களது இல்லத்தில் நடைபெறும் விழாவிற்கு வருகை தந்துள்ள இந்தச் சூழலில், என்னுடைய இல்லத்திற்கு வந்து மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். அதேநேரம் நான் மேற்கு வங்கத்திற்கு விருந்தினராக அவசியம் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். தேர்தல் குறித்து இல்லை. தேர்தல் குறித்தோ அரசியல் குறித்தோ எதுவும் பேசவில்லை” என்றார்.

அதன் பிறகு மம்தா பேசுகையில், “தமிழக முதல்வர் ஸ்டாலின் என்னுடைய சகோதரர் போன்றவர். நான் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இது திட்டமிட்ட சந்திப்பு நிகழ்வு இல்லை. மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக இருக்கக் கூடிய இல.கணேசனின் இல்லத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக நான் சென்னை வந்தேன். ஸ்டாலினை சந்திக்காமல் நான் எப்படி சென்னையில் இருந்து செல்வேன். எனவே, அவரை சந்திப்பது எனது கடமையென்று நான் அறிவேன். இரு அரசியல் தலைவர்கள் சந்திக்கும்போது ஏதாவது பேசுவோம். மக்கள் நலன் சார்ந்த அரசியல் குறித்து பேசுவோம். மக்களின் முன்னேற்றம் குறித்து உரையாடுவோம். அரசியல் கடந்து மக்களின் மேம்பாடு குறித்த உரையாடல் சிறந்தது என்று நான் கருதுகிறேன்.

இது தனிப்பட்ட, மரியாதை நிமித்தமான, சகோதர – சகோதரி உறவுகளுக்கு இடையேயான சந்திப்பு. இதிலிருந்து நீங்களே, இந்தச் சந்திப்பு அரசியல் சார்ந்ததா, சமூகம் சார்ந்ததா, கலாச்சாரம் சார்ந்ததா என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்” என்றார். இந்தச் சந்திப்பின்போது திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.