ஹைதராபாத்: ராகுல் காந்தி மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை யாத்திரை, அரசியல் சூழலை மாற்றும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் யாத்திரையை முடித்த ராகுல், தெலங்கானாவில் தற்போது யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவருடன் காங்கிரஸ் தொண்டர்கள் சிலரும் 3,500 கி.மீ யாத்திரையில் பங்கேற்றுள்ளனர்.
அவர்களுடன் ஹைதராபாத்தில் உள்ள போவன்பாலி என்ற இடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று கலந்துரையாடினார். அதன்பின் அவர் ட்விட்டரில் அளித்துள்ள தகவலில், ‘‘இந்திய ஒற்றுமை யாத்திரை அமைதிப் புரட்சியை ஏற்படுத்துகிறது. இது நாட்டின் அரசியல் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தும். ராகுலுடன் யாத்திரையில் கலந்து கொண்டுள்ளவர்கள், கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளிப்பவர்களாக உள்ளனர்’’ என குறிப்பிட்டுள்ளார்.