குஜராத் சட்டசபைக்கு டிச.1, 5ல் தேர்தல்: இரண்டு கட்டமாக நடக்கிறது.! நாளை வேட்புமனு தாக்கல் ஆரம்பம்

புதுடெல்லி: மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இமாச்சல் பிரதேசம், குஜராத் மாநிலங்களின் சட்டப்பேரவை காலம் விரைவில் முடிய உள்ளதால், இங்கு தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. தேர்தல் நடத்தபட்ட உள்ள மாநிலங்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழு சென்று, மாநில தேர்தல் அதிகாரி, கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தியது. இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 14ம் தேதி இமாச்சல் பிரதேசத்துக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை ராஜீவ் குமார் அறிவித்தார்.

இம்மாநிலத்தில் வரும் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த அறிவிப்பை வெளியிட்டபோதே குஜராத்துக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரு மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலத்திற்கு இடையே 40 நாட்கள் வித்தியாசம் இருப்பதால், குஜராத்துக்கான தேர்தல் தேதியை ராஜீவ் குமார் அறிவிக்கவில்லை. இதற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பின. இந்நிலையில், குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. டெல்லி ஆகாஷ் பவனில் உள்ள ரங்பவன் அரங்கத்தில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று மதியம் 12 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்தித்து, தேர்தல் தேதியை வெளியிட்டார்.  அப்போது, அவர் கூறியதாவது: குஜாரத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1ம் தேதியும், 5ம் தேதியும் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்.

மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 89 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவும், இதர 93 தொகுதிகளில் 2ம் கட்ட  வாக்குப்பதிவு நடக்கும். முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 5ம் தேதியும், 2ம் கட்ட  தேர்தலுக்கு நவம்பர் 10ம் தேதியும் தொடங்கும். முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலுக்கு நவ. 14ம் தேதியும், 2ம் கட்ட தேர்தலுக்கான மனு தாக்கலுக்கு நவ. 17ம் தேதியும் கடைசி நாள். வேட்பு மனுக்கள் பரிசீலனை முறையே நவ.15, நவ. 18ம் தேதிகளில் நடக்கும். வேட்புமனுவை திரும்ப பெற முறையே நவ. 17, நவ. 21 கடைசி நாளாகும். இவற்றில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடக்கும். இத்தேர்தலில் புதிதாக 4.6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 51,782 வாக்குச்சாவடிகளில் 4.90 கோடி வக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய உள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளும் தரைத்தளத்தில் அமைக்கப்படும். 80 வயதானவர்கள், 40 சதவீதம் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.