குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம் ஏன்?- ஆணையம் அசத்தல் விளக்கம்!

குஜராத் மற்றும் ஹிமாசலப் பிரதேச மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி கடந்த முறை (2017) ஓரே நேரத்தில் அறிவிக்கப்பட்டன. அதேபோன்று இம்முறையும் இரு மாநிலங்களின் பேரவைக்கான தேர்தல் தேதி ஒரே நேரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக ஹிமாசலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை மட்டும் இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 16 ஆம் தேதி அறிவித்தது. குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி தனியாக பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆணையம் அப்போது அறிவித்திருந்தது.

“இரண்டு மாநிலங்களுக்கு அடுத்தடுத்து தனித்தனியே தேர்தல் நடத்துவதாக இருந்தால், ஒரு மாநிலத்தின் தேர்தல் நடந்து முடிந்து 30 நாட்களுக்குப் பிறகே அடுத்த தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் விதி. ஒன்றின் முடிவு மற்றொன்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகவே இந்த விதி அமலில் உள்ளது.

இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவையின் பதவிக்கலம் முடிவடையும் தேதியில் இருந்து 40 நாட்கள் கழித்தே குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைவதால் இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களையும் தனித்தனியே நடத்துவதில் விதிப்படி தவறில்லை” என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அ்ப்போது விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், குஜராத் மாநிலத்துக்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ‘வாக்காளர்களை கவரும் விதமாக, பல்வேறு சலுகைகளுடன்கூடிய தி்ட்டங்களை மாநில பாஜக அரசின் சார்பில் பிரதமர் மோடி அறிவிப்பதற்கு வசதியாகதான் குஜராத் பேரவைத் தேர்தல் தேதி தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?’ என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ‘ குஜராத்தில் சமீபத்தில் மிகவும் துயரமான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது(மோர்பி பால விபத்து). இந்த சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று மாநில அளவில் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு தாமதமானதற்கு இச்சம்பவமும் ஒரு காரணம்’ என்று யாரும் எதிர்பார்க்காத விளக்கத்தை அளித்து அசத்தி உள்ளது ஆணையம். தேர்தல் ஆணையரின் இந்த விளக்கம் அரசியல் அரங்கில் நகைப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹிமாசலப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 12 ஆம் தேதியும், குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளிலும் தேர்தல் நடத்தப்பட்டு டிசம்பர் 8 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.