புதுடில்லி :புதுடில்லியில் உள்ள செங்கோட்டையில் நடந்த தாக்குதல் தொடர்பான வழக்கில், லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிப்பின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்தது.
புதுடில்லியில் உள்ள செங்கோட்டையில், 2000ம் ஆண்டு டிச., 22ல் நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த பாதுகாப்பு வீரர்கள் மீது சரமாரியாக சுட்டனர். இதில், நம் ராணுவத்தின் ஏழாவது ராஜ்புதனா ரைபிள்ஸ் படைப் பிரிவைச் சேர்ந்த மூன்று வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிப் கைது செய்யப்பட்டார். இந்த தாக்குதல் வழக்கை விசாரித்த, விசாரணை நீதிமன்றம், 2005ல் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.
இதை புதுடில்லி உயர் நீதிமன்றம், 2007லும், உச்ச நீதிமன்றம், 2011லும் உறுதி செய்தன. இந்த தீர்ப்பை எதிர்த்து, முகமது ஆரிப் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, முகமது ஆரிப் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. சீராய்வு மனு மீது நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
இதன்படி, இந்த சீராய்வு மனுவை, தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில், முகமது ஆரிப்புக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது.
‘இந்த தாக்குதல் நம் தாய் நாட்டின் மீதான தாக்குதல். சதியாளர்களுக்கு இந்நாட்டில் இடமில்லை.
‘நம் ராணுவ வீரர்களை கொன்றதுடன், நம் நாட்டுக்கு எதிராக போர் தொடுக்கும் வகையில் முகமது ஆரிப் செயல்பட்டுள்ளார்’ என, தீர்ப்பில் அமர்வு குறிப்பிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement