சோனிபட் ஹரியானாவில் திருமணம் செய்து கொள்ள மறுத்த வாலிபர் மீது, ‘ஆசிட்’ ஊற்றிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
ஹரியானாவின் சோனிபட் நகரில் வசிக்கும் ஷியாம் சிங், 25, அருகிலுள்ள கோஹனா கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலியை, 23, காதலித்து வந்தார்.
சில நாட்களுக்கு முன் ஷியாம் வீட்டுக்கு வந்த அஞ்சலி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். இன்னும் சில மாதங்கள் போகட்டும் என ஷியாம் சிங் கூறியுள்ளார்.
இதற்கிடையே, அஞ்சலி ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்கிறார் என்ற விபரம் ஷியாமுக்கு தெரிய வந்தது. இதையடுத்து, அவர் அஞ்சலியுடன் பேசுவதை நிறுத்தி விட்டார்.
மீண்டும் ஷியாம் வீட்டுக்கு வந்த அஞ்சலி திருமணம் செய்து கொள்ளச் சொல்லி அவரை கட்டாயப்படுத்தினார்.
ஆனால், ஷியாம் மறுக்கவே ஆத்திரம் அடைந்த அஞ்சலி, ஆசிட் பாட்டிலுடன் வந்து, ‘எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது’ என கூறியவாறு ஷியாம் மீது ஊற்றினார்.
இதில், கை,கால் மற்றும் முகம் வெந்த நிலையில், ஷியாம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சோனிபட் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அஞ்சலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement