மும்பை: பாதுகாப்பு, போக்குவரத்து, எரிசக்தி ஆகிய துறைகளில் சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றம் தொடர்பான சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மும்பையில் நேற்று தொடங்கியது. இதனை, மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில் பேரில் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னிலையில் உள்ளது. இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்க யாருக்கும் தைரியம் இல்லை. அப்படி யாரேனும் துணிந்தால் அவர்களுக்கு உடனடி பதிலடி கொடுக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது.
பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யும் உலகின் முன்னணி 25 நாடுகள் பட்டியலில் முதல்முறையாக இந்தியா இடம்பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் இது சாத்தியமாகியுள்ளது.
ராணுவ உபகரணங்கள், ராக்கெட்டுகள், ஏவுகணைகள், போர் விமானங்கள், டாங்கிகள், துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை பிற நாடுகளுக்கு நாம் வழங்கி வருகிறோம். இதற்கு முன் பிற நாடுகளிடம் இருந்து இவற்றை நாம் வாங்கிக் கொண்டிருந்தோம். ஆனால் தற்போது பிற நாடுகளுக்கு நாம் கொடுப்பதை உலகம் வியந்து பார்க்கிறது. இத்துறையில் உலகில் முன்னணி இடம் வகிக்கும் பாதையில் இந்தியா சென்றுகொண்டிருக்கிறது. இவ்வாறு அமைச்சர் அஜய் பட் கூறினார்.