புதுடில்லி, ‘வாட்ஸ் ஆப்’ தகவல் பரிமாற்ற சேவை நிறுவனம், பல்வேறு புதிய சேவைகளை அதிரடியாக அறிமுகம் செய்துள்ளது.
இனி, பயனாளர்கள் ஒரே நேரத்தில், 32 பேர் வரை குரல் அல்லது ‘வீடியோ’ அழைப்பில் பேசுவது, 2 ‘ஜிபி’ வரையிலான, ‘பைல்’களை அனுப்புவது, குழுக்களில் 1,024 பேர் வரை இணைத்துக் கொள்வது உட்பட பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
உலகம் முழுதும், 200 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள், ‘வாட்ஸ் ஆப்’ எனப்படும், தகவல் பரிமாற்ற செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிறுவனத்தை, அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘மெட்டா’ நிர்வகித்து வருகிறது.
இந்த தகவல் பரிமாற்ற செயலியில் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், வாட்ஸ் ஆப் நிறுவனம் பல அதிரடிமாற்றங்களை நேற்று அறிவித்துள்ளது.
அதன் விபரம்:
வாட்ஸ் ஆப் செயலியில், ‘கம்யூனிட்டீஸ்’ எனப்படும் சமூக குழுக்களை உருவாக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதில், பயனாளர்கள் தங்களுக்கென தனியாக ஒரு சமூக குழுவை உருவாக்கிக் கொள்ள முடியும்.
இதில், 5,000 பேர் வரை இணைத்துக் கொண்டு பல்வேறு தகவல்கள், அறிவிப்புகளை பகிர முடியும். கருத்துக் கணிப்புகளும் நடத்த முடியும்.
மேலும், 32 பேர் வரை இணைந்து கொள்ளக் கூடிய குரல் அல்லது வீடியோ அழைப்பு வசதி அறிமுகமாகிறது. தற்போது அதிகபட்சமாக, 16 எம்பி வரையிலான பைல்களை மட்டுமே வாட்ஸ் ஆப் வாயிலாக அனுப்ப முடியும்.
இது 2 ஜிபியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், குழுக்களில் 1,024 பேர் வரை இனி இணைத்துக்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதிகள் அனைத்தும் படிப்படியாக வரும் வாரங்களில், அனைத்து பயனாளர்களுக்கும் சென்றடையும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்