லாகூர் (பாகிஸ்தான்): பாகிஸ்தானில் படுகொலை முயற்சி ஒன்றில், துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளான அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது நலமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்ரான் கான் நடத்திய பேரணி: பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வலியுறுத்தி அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சியின் தலைவருமான இம்ரான் கான் பேரணி மேற்கொண்டு வந்தார். 6 நாட்களுக்கு முன்பு தொடங்கிய அவரது பேரணி வியாழக்கிழமை பஞ்சாப் மாகாணத்தின் வஜிராபாத் வந்தது. அவரது கட்சியின் முன்னணி தலைவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்றனர். இம்ரான் கான் தனது பிரச்சார வாகனத்தின் உச்சியில் இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அவரது இரண்டு கால்களிலும் 3 குண்டுகள் பாய்ந்தன.
மருத்துவமனையில் இம்ரான் கான்: இரு கால்களிலும் 3 குண்டுகள் பாய்ந்த நிலையில் வஜிராபாத்தில் இருந்து உடனடியாக அவர் லாகூரில் உள்ள ஷவுகத் கானும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இம்ரான் கான் ஆபத்து கட்டத்தை கடந்துவிட்டதாகவும், நலமாக இருப்பதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் ஃபைசல் சுல்தான் மேற்பார்வையில் இம்ரான் கானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டில் பி.டி.ஐ கட்சியைச் சேர்ந்த முன்னணி தலைவர்களான ஃபைசல் ஜாவெத், அகமது சத்தா உள்பட 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டிற்கு கண்டனம்: இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பிடிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இம்ரான் கானை கொல்ல வேண்டும் எனும் நோக்கில் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் இது என பி.டி.ஐ கட்சி கண்டித்துள்ளது. இந்த தாக்குதலை அடுத்து பேரணியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் கண்டனம்: இம்ரான் கான் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இம்ரான் கான் மீதான துப்பாக்கிச் சூட்டை கடுமையாக கண்டிக்கிறேன். இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக அறிக்கை அளிக்கும்படி உள்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளேன். இம்ரான் கான் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். காயமடைந்த மற்றவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
பாதுகாப்பு மற்றும் விசாரணை விவகாரத்தில், பஞ்சாப் அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். வன்முறையில் யாரும் ஈடுபடக்கூடாது. பாகிஸ்தான் அரசியலில் வன்முறைக்கு இடம் இல்லை” என தெரிவித்துள்ளார். இம்ரான் கான் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபர் டாக்டர் ஆரிப் ஆல்வி, முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, இம்மான் கானின் முன்னாள் மனைவி ரேஹம் கான் உள்ளிட்டோர் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது: இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டார். நவீத் முகம்மது பஷீர் என்ற அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துவதாலேயே அவரை கொல்ல தான் முடிவெடுத்ததாக நவீத் முகம்மது பஷீர் வாக்குமூலம் அளித்துள்ளார். இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்ட மற்றொரு நபராகக் கருதப்பட்டவர், சுட்டுக்கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச்சூட்டிற்குப் பிறகு இம்ரான் கான்: அல்லா தனக்கு மீண்டும் ஒரு வாழ்க்கையை அளித்திருப்பதாக துப்பாக்கிச்சூட்டிற்குப் பிறகு இம்ரான் கான் நெருங்கிய நண்பர்களிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. என்னை கொல்ல முயற்சிப்பார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், என்னை அல்லா காப்பாற்றுவார் என்பது அவர்களுக்குத் தெரியாது என அவர் கூறியுள்ளார். திரும்பி வந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.