பெண்ணின் 5 பவுன் தங்கசெயினை பறித்துச்சென்ற பைக் கொள்ளையர்கள்-துரிதமாக இளைஞர் செய்த காரியம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பெண்ணிடம் வழிப்பறி செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்ற மூன்று வழிப்பறிக் கொள்ளையர்களை, 20 கிமீ தூரம் இளைஞர் ஒருவர் விரட்டி சென்று பொதுமக்கள் உதவியுடன் அந்த கொள்ளையர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நிகழ்வு பாராட்டுக்கள் பெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சமீப காலமாக வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், போலீசார் தனிப்படை அமைத்தும் கூட குற்றவாளிகளை பிடிக்க காலதாமதம் ஆகி வருவதால், தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கல்லாலங்குடியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் திருப்பதி என்பவரின் மனைவி சத்யா தேவி, இன்று காய்கறிகள் வாங்குவதற்காக ஆலங்குடி சந்தைக்கு சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது வடகாடு முகம் என்னும் இடத்தில் அவர் சென்றபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் அறுத்துகொண்டு வேகமாக புதுக்கோட்டை நோக்கி தப்பி உள்ளனர்.
இதனைப் பார்த்த ஆலங்குடியை சேர்ந்த தினேஷ் என்ற இளைஞர், தனது இருசக்கர வாகனத்தில் அந்த மூன்று வழிப்பறி கொள்ளையர்களையும் விரட்டிக்கொண்டு சென்றுள்ளார். இதனிடையே மேட்டுப்பட்டியில் உள்ள தனது நண்பர்களுக்கும் நடந்த தகவலை கூறி கொள்ளையர்கள் வரும் இருசக்கர வாகன விவரத்தையும் கூறியுள்ளார். வழிப்பறிக் கொள்ளையர்களை 20 கிலோமீட்டர் தூரம் தினேஷ் விரட்டி சென்ற நிலையில மேட்டுப்ட்டி என்ற இடத்தில் அந்தப் பகுதி இளைஞர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுமக்களோடு சேர்ந்து மூன்று கொள்ளையர்களை பிடித்தனர்.
image
இதன் பின்பு இதுகுறித்து போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் மூன்று பேரையும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் அவர்கள் மூவரும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் மீது இதற்கு முன்னர் இதேபோன்று பல வழிப்பறி கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் இன்று இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை குற்றவாளிகளை பிடித்துக் கொடுத்திருப்பது பாராட்டுகளை பெற்றாலும், போலீசாரும் கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்டம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.