அம்பத்தூர்: சென்னை பாடி டிஎம்பி நகர் அவ்வை தெருவை சேர்ந்தவர் திருமலை (37). இவரது மனைவி ராகவி (34). இவர்களுக்கு இரண்டரை வயதில் ரித்திகா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று மதியம், மகளுக்கு உணவு கொடுத்துவிட்டு, வீட்டின் வெளியே வரவேற்பு அறையில் அமர்ந்து ராகவி அக்கம்பக்கத்தினருடன் பேசியுள்ளார்.
சிறிது நேரத்தில் ரித்திகாஸ்ரீ அலறும் சத்தம் கேட்டு ராகவி ஓடிசென்று பார்த்துள்ளார். அப்போது, உள்தாழ்பாள் போடப்பட்டு இருந்தது தெரியவந்தது. உள்தாழ்ப்பாள் போட்ட சிறுமிக்கு அதை திறக்க முடியவில்லை.
இதனால் செய்வதறியாது தவித்த ராகவி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அம்பத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி அதிநவீன கருவி மூலம் உள்தாழ்பாளை உடைத்தனர். பின்னர், சிறுமியை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். இதற்காக தீயணைப்பு துறையினருக்கு கண்கலங்கியபடி ராகவி நன்றி தெரிவித்தார்.