“என்னைப் பற்றிய அவதூறு பேச்சை கேட்டு சிரித்த அமைச்சர்…” – குஷ்பு கொந்தளிப்பு

புதுடெல்லி: “ஒரு நல்ல சூழ்நிலையில் வளர்ந்த ஆண்கள் யாருமே இப்படி பெண்கள் குறித்து தவறாக பேசமாட்டார்கள். பெண்களை குறித்து தவறாக பேசும்போது அதை அமர்ந்துகொண்டு ரசிக்கவும் மாட்டார்கள்” என்று நடிகை குஷ்பு கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.

தன்னைப் பற்றி அவதூறாக பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்கிற்கு எதிராக பாஜக நிர்வாகி குஷ்பு, டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். அந்த மனுவில், தான் உட்பட பாஜக நிர்வாகிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், கேவலப்படுத்தும் வகையிலும் திமுக நிர்வாகி பேசியுள்ளார். எனவே, சம்பந்தப்பட்டவரிடம் மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி தேசிய மகளிர் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகார் மனுவை அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, “சென்னையில் திமுகவில் இருக்கும் நபர் ஒருவர் என்னைப் பற்றியும், மற்ற மூன்று பெண்களை பற்றியும் அவ்வளவு அவதூறாகவும், கேவலமாகவும் பேசியிருக்கிறார்.

ஒரு மேடை நிகழ்ச்சியில், அத்தனை பெரிய கூட்டத்துக்கு மத்தியில் என்னைப் பற்றி அவ்வளவு அவதூறாகவும், கேவலமாகவும் பேசியதோடு, என்னை அவமானப்படுத்தினார். அப்போது மேடையில் உட்கார்ந்திருந்த அமைச்சர் கேட்டு சிரித்துவிட்டு, 4 நாட்கள் கழித்து, சம்பந்தப்பட்ட நபரை தனிமையில் அழைத்து திட்டியதாக கூறுவதோடு, நான் விளம்பரம் தேடிக் கொள்வதாக மீண்டும் என்மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படும்போது, இதுபோன்ற ஆண்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறியமுடிகிறது.

ஒரு நல்ல சூழ்நிலையில் வளர்ந்த ஆண்கள் யாருமே இப்படி பெண்கள் குறித்து தவறாக பேசமாட்டார்கள். பெண்களை குறித்து தவறாக பேசும்போது அதை அமர்ந்துகொண்டு ரசிக்கவும் மாட்டார்கள்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, சென்னையில் நடந்த திமுக கூட்டத்தில், அக்கட்சியின் நிர்வாகி சைதை சாதிக் பாஜக மகளிரணியைச் சேர்ந்த குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம் மற்றும் கவுதமி குறித்து அவதூறாக பேசியிருந்தார். இதுதொடர்பாக பாஜக மகளிரணி சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சைதை சாதிக் மீது 5 பிரிவுகளின் கீழ் சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இச்சம்பவத்தின்போது, மேடையில் இருந்த அமைச்சர் மனோ தங்கராஜ் சிரித்து கொண்டிருந்ததாக குஷ்பு குற்றம்சாட்டியிருந்தார். இதனை அமைச்சர் மனோதங்கராஜ் மறுத்திருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.