எலான் மஸ்க் என்ன பண்ணீங்க? எங்களுக்கு ட்விட்டர் வர மாட்டீகுது… கதறும் இந்தியர்கள்!

உலகம் முழுவதும் பிரபல சமூக வலைதளமாக ட்விட்டர் விளங்குகிறது. இதனை சமீபத்தில் அமெரிக்காவின் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் வாங்கினார். அதன்பிறகு சிஇஓ பராக் அக்ரவால் முதல் பல்வேறு முக்கிய நிர்வாகிகளை வேலையை விட்டு தூக்கினார். அடுத்தகட்டமாக ஊழியர்களை அதிரடியாக நீக்கப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் ப்ளூ டிக்கிற்கு மாதம் 8 டாலர் கட்டணம் என்றும் அதிரடி காட்டினார்.

இந்த சூழலில் இந்தியாவில் உள்ள பயனாளர்கள் பலருக்கு ட்விட்டர் வலைதளம் வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ட்விட்டரின் Home Page-ஐ கூகுளில் ப்ரவுஸ் செய்தால் அந்த பக்கத்தில் ”Try Again” என்று வருகிறது. சில நிமிடங்கள் என்றால் பெரிதாக தெரியாது. கடந்த சில மணி நேரங்களாக இதேநிலை தான் நீடிக்கிறது.

இதனால் இந்தியப் பயனாளர்கள் பலரும் தவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்-அப் முடங்கிய போது, அனைவரும் ட்விட்டர் தளத்திற்கு ஓடிவந்து தான் என்னாச்சு? எப்போது மீண்டு வரும்? என்று தேடினர். தற்போது அந்த ட்விட்டர் பக்கத்திற்கே பிரச்சினை வந்துள்ளதால், எங்கே சென்று விவரம் தெரிந்து கொள்வது என குழம்பி போயுள்ளனர். முன்னதாக இன்று முதல் ட்விட்டரில் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

அதன்படி, பலரை தூக்கிவிட்டாரா? இதனால் ஊழியர்கள் போதிய அளவில் அலுவலகத்தில் இல்லையா? தொழில்நுட்ப விஷயங்களை கையாள்வதில் சிக்கலா? போன்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில் ட்விட்டர் ஊழியர்களுக்கு இன்று காலை அனுப்பப்பட்ட இ-மெயிலில், ட்விட்டர் நிறுவனத்தை ஆரோக்கியமான பாதையில் நடைபோடச் செய்ய சில கடினமாக முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.

அதன் ஒருபகுதியாகவே ஊழியர்கள் குறைக்கப்படுகின்றனர். இதையொட்டி ட்விட்டர் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன. அனைத்து ஊழியர்கள் மற்றும் டேட்டா பாதுகாப்பு காரணமாக பேட்ஜ் அக்சஸ் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன.

பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கும், மற்ற ஊழியர்களுக்கும் தனிப்பட்ட முறையில் இ-மெயில் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது ட்விட்டரை பயன்படுத்துவதில் நிலவும் பிரச்சினைகள் உடனடியாக சரிசெய்யப்படாதோ? என்ற சந்தேகம் வலுக்கத் தொடங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.