புதுடெல்லி: அடுத்த சில நாட்களில் இந்தியா அதிநவீன ஏவுகணையை சோதனை செய்ய உள்ள நிலையில், இந்தியப் பெருங்கடலில் சீனா தனது உளவுக்கப்பலை நிறுத்தியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்னை கடந்த 2020ம் ஆண்டிலிருந்து தீவிரமான நிலையில் உள்ளது. இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் மாதம், சீனாவின் அதிநவீன உளவு கப்பலான யுவாங் வாங்-5, இலங்கையின் ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் நிலைநிறுத்தப்பட்டது. தென் சீன கடலுக்கு திரும்பும் முன்பாக எரிபொருள் நிரப்ப இக்கப்பல் ஹம்பாந்தோட்டா துறைமுகத்திற்கு வருவதாக சீனா கூறியது.
அந்த துறைமுகத்தை இலங்கையிடம் இருந்து 99 ஆண்டுக்கு சீன குத்தகை எடுத்துள்ளது. இந்த கப்பலில் 750 கிமீ தூரம் வரையிலான இடங்களை கண்காணிக்க முடியும். இதனால் இந்தியாவின் முக்கி்ய ராணுவ தளங்களை சீன கப்பல் உளவு பார்க்கும் என ஒன்றிய அரசு கவலை தெரிவித்தது. இந்த விஷயத்தில் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன கப்பல் ஹம்பாந்தோட்டா துறைமுகம் வர இலங்கை அனுமதித்தது. 5 நாட்கள் வரை துறைமுகத்தில் இருந்து சீன உளவு கப்பல் பின்னர் திரும்பிச் சென்றது. இந்நிலையில், அடுத்த சில தினங்களில் இந்தியா முக்கியமான ஏவுகணையை சோதனையை நடத்த உள்ள நிலையில், யுவாங் வாங்-5 உளவு கப்பல் மீண்டும் இந்திய பெருங்கடல் பகுதிக்கு வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இக்கப்பல் இந்தோனேஷியாவின் பாலி தீவுக்கு அருகே நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக கப்பல்களின் இயக்கத்தை கண்காணிக்கும் மேரிடைம் டிராபிக் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியா அடுத்த சில நாட்களில் சுமார் 2,200 கிமீ தூரம் வரை பாயும் ஏவுகணை ஒன்றை சோதனை செய்ய இருப்பதாகவும் அந்த சமயத்தில், இலங்கையின் மேற்குப் பகுதியில் இருந்து இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதி வரை விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டுமென விமான பயணங்களுக்கு நோட்டீஸ் விடுத்துள்ளது. இந்த நோட்டீசை தொடர்ந்து யுவாவ் வாங் உளவு கப்பலை சீனா அனுப்பி உள்ளது. இதன் காரணமாக, இக்கப்பல் மூலமாக இந்திய ஏவுகணையின் பாதை, வேகம், துல்லியம், வரம்பு போன்ற முக்கிய தகவல்களை சீனா உளவு பார்க்கும் என்ற கவலை எழுந்துள்ளது.
* ஏடி-1ஐ உளவு பார்த்ததா?
ஒடிசா கடற்பகுதியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) 5 ஆயிரம் கி.மீ. தூரத்தில் இருந்து ஏவப்படும் எதிரிகளின் ஏவுகணையை இடைமறித்து அழிக்கும் ஏடி-1 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த ஏவுகணை குறிப்பாக சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஏவுகணையையும் சீன உளவு கப்பல் உளவு பார்த்திருக்குமோ என்ற சந்தேகம் தற்போது வலுத்துள்ளது.