புதுடெல்லி: நாட்டில் கடந்த 2020-ல் கரோனா வைரஸ் பாதிப்பின்போது பள்ளிகள் நேரடி வகுப்புகளுக்கு பதிலாக ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறின. அப்போது புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் பாதிக்கப்படுவதை தடுக்க சமச்சீரான கல்விக் கொள்கை வகுக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தன்னார்வ அமைப்பு ஒன்றின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 6 முதல் 14 வயதுடைய குழந்தைகளின் கல்விக்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கை போதுமானதல்ல என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அபே எஸ். ஓகா ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. காரோனா பாதிப்பு தற்போது முடிவுக்கு வந்து, பள்ளிகள் முழு அளவில் இயங்கி வருவதால் இம்மனுவை தற்போது விசாரிப்பது பொருத்தமற்றது என நீதிபதிகள் தெரிவித்தனர். “மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் இந்த மனுவை வாபஸ் பெறவேண்டும்” என உத்தரவிட்டனர்.