காந்தாரா படத்தில் புனீத் ராஜ்குமார் நடிக்க விரும்பினார் : ரிஷப் ஷெட்டி

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த பிரபல நடிகர் புனீத் ராஜ்குமார், கடந்த வருடம் திடீர் மாரடைப்பால் காலமானார். அவர் இறந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் சமீபத்தில் அவருக்கு கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடக ரத்னா என்ற விருது வழங்கப்பட்டது.

இந்தநிலையில் பலரும் அவருடனான தங்களது நினைவுகளை மீண்டும் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி கன்னடத்தில் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பையும், வசூலையும் பெற்ற படம் காந்தாரா. இந்த படத்தின் நாயகனும், இயக்குனருமான ரிஷப் ஷெட்டி கூறும்போது புனீத் ராஜ்குமார் காந்தாரா படத்தில் நடிக்க விரும்பினார் என்கிற புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தின் கதையை தயார் செய்ததும் புனீத் ராஜ்குமாருடன் கூறினேன். இதைக்கேட்டு முடித்ததுமே இந்த படத்தில் கட்டாயம் நான் நடிக்கிறேன் என்று கூறினார். அந்த அளவிற்கு இந்த கதை அவரை ஈர்த்து இருந்தது. ஆனால் அடுத்தடுத்த படங்களில் அவர் பிசியாக இருந்தார். ஒருமுறை என்னை நேரில் அழைத்து நான் இந்த படத்தை பண்ண வேண்டுமென்றால் இன்னும் சில நாட்கள் காலதாமதமாகும் போல தெரிகிறது. அதனால் இந்தப் படத்தில் நீயே நடித்துவிடு.. எனக்காக காத்திருக்க வேண்டாம் என்று கூறினார்.

இந்த கதை எழுதிய போது நானே இதில் நடிக்க விருப்பம் இருந்தாலும் புனீத் ராஜ்குமார் இதில் நடிக்கும்போது இன்னும் இந்த படம் சிறப்பாக வரும் என்கிற எண்ணத்தில்தான் அவரிடம் இந்த கதையை நான் கூறினேன். பின்னர் அவரே அப்படி கூறியதும் இந்த படத்தில் நானே நடிக்கத் தொடங்கி படப்பிடிப்பை நடத்தி வந்தேன். கடந்த வருடம் அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கலந்து கொண்ட ஒரு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கூட என்னை பார்த்ததும் படம் எந்த அளவிற்கு வந்திருக்கிறது என்று அக்கறையுடன் விசாரித்தார். அவர் இந்த படத்தில் நடித்து இருந்தால் அது இன்னும் இந்த படத்திற்கு கூடுதல் சிறப்பம்சமாக அமைந்திருக்கும்” என்று நெகிழ்வுடன் கூறியுள்ளார் ரிஷப் ஷெட்டி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.