கார்மீது சாய்ந்து நின்ற சிறுவனை எட்டி உதைத்த உரிமையாளர் – கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

கேரளாவில் தனது காரின்மீது சாய்ந்த சிறுவனை எட்டி உதைத்த இளைஞர்மீது கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையங்களில் பரவி பலரின் கவனத்தையும் திருப்பியுள்ளது. 
கண்ணூர் மாவட்டம் தலசேரியில் நவம்பர் 3ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் கணேஷ், சாலையோரம் நின்றுகொண்டிருந்த காரின்மீது சாய்ந்து நின்றுள்ளான். அப்போது அங்குவந்த காரின் உரிமையாளர் ஷிஷாத், சிறுவன்மீது கோபம்கொண்டு கணேஷின் இடுப்பின்மீது எட்டி உதைத்துள்ளார். வலிதாங்க முடியாத கணேஷ் இடுப்பை பிடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து, மீண்டும் காரையே பார்த்தபடி நின்றுள்ளான்.
இதனைப்பார்த்த பொதுமக்கள் ஷிஷாத்தை மடக்கி, அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அதன்பிறகு வலியால் துடித்த சிறுவனை மருத்துவமனையில் சேர்த்ததுடன், அங்குவந்த சிறுவனின் தாயார் மதூர், இதுகுறித்து போலீசில் புகாரளிக்கவும் உதவியுள்ளனர். வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் புகாரளிக்கச் சென்ற சிறுவனின் பெற்றோரை பொன்யம்பலம் காவல்நிலைய போலீசார் மறுநாள் காலை வரும்படி திருப்பி அனுப்பியுள்ளனர். அதற்குள் சிசிடிவி காட்சிகளை பெற்ற பொதுமக்கள் அதனை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வைரலாக்கினர்.
இது பலரின் கோபத்தையும் தூண்டிய நிலையில் பலரும் ஏன் இளைஞர்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியதையடுத்து, இன்று இளைஞர் ஷிஷாத் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். தற்போது ஷிஷாத் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கேரள போலீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.

கண்ணூர் மாவட்டம் தலசேரியில் கணேஷ் என்ற சிறுவன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின்மீது சாய்ந்து நின்றுள்ளான். அதனைக்கண்ட காரின் உரிமையாளரான ஷிஷாத் என்ற இளைஞர் சிறுவனின் இடுப்பின்மீது எட்டி உதைத்துள்ளார். #Kerala | #CCTV pic.twitter.com/ysGT5JhzJA
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) November 4, 2022

இதுகுறித்து தலச்சேரி காவல் துணைக் கண்காணிப்பாளர் நிதின் ராஜ் கூறுகையில், ’’வழக்கின் அடிப்படையில் குற்றவாளியை இன்று காலைமுதல் காவலில் வைத்துள்ளோம். சிறுவனுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுவதையும் நாங்கள் உறுதி செய்துள்ளோம். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு போலீசார் இத்தனை வருடங்களும் உதவிவருகின்றனர். குற்றவாளி மீது இந்திய சட்டப்பிரிவுகள் 308(குற்றமற்ற கொலை முயற்சி) மற்றும் 323(தானாக முன்வந்து காயப்படுத்தியதற்காக தண்டனை) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
ராஜஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த கணேஷின் குடும்பம் கடந்த இரண்டு வருடங்களாக தலசேரி பகுதியில் தங்கி பலூன் வியாபாரம் செய்துவருகின்றனர். இதுபோல் வட மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்த பல குடும்பங்கள் கேரளாவில் வழியோரம் மற்றும் வீதிகளில் சிறுசிறு வியாபாரங்களை செய்துவருகின்றனர். இந்த குடும்பங்களில் பெரும்பாலும் பள்ளிக்குச் செல்லாத சிறுகுழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.